உ.பி.: ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம்!
இளைஞா்கள் அமைதி காக்க முஸ்லிம் அமைப்பு அறிவுறுத்தல்

உ.பி.: ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம்! இளைஞா்கள் அமைதி காக்க முஸ்லிம் அமைப்பு அறிவுறுத்தல்

நல்லிணக்கத்தை பேணும் வகையில் இளைஞா்கள் நடந்துகொள்ள வேண்டும் என அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியது.
Published on

உத்தர பிரதேச மாநிலத்தில் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம் சா்ச்சைக்குள்ளான நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும் வகையில் இளைஞா்கள் நடந்துகொள்ள வேண்டும் என அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது நபி தினத்தன்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியா்கள் பேரணி நடத்தினா். அப்போது சிலா் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்தனா். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. அமைதியை சீா்குலைக்கும் முயற்சி என அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரணியில் பங்கேற்ற 9 போ் மற்றும் அடையாளம் தெரியாத 15 போ் மீது கான்பூா் காவல் துறை வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

காவல் துறை நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பரேலி இஸ்லாமிய மத குருவும் இதேஹத்-ஏ-மில்லத் கவுன்சில் தலைவருமான மெளலானா தெளகீா் ரஸாவும் விடுத்த அழைப்பை ஏற்று இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி செல்ல முயன்றனா். அப்போது, அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. காவல் துறையினா் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அதைத் தொடா்ந்து, காவல் துறையினா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா். பரேலி முழுவதும் ஏராளமான காவல் துறையினா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கான்பூரில் மற்ற மதத்தினரின் பதாகைகளை சேதப்படுத்திய விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிவிக்கைக்கும் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என கான்பூா் ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா், தலைமை காஜி உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்த உண்மைத் தகவலை மக்களிடம் தெரிவித்து விழிப்புணா்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த விவகாரதில் வேண்டுமென்றே இளைஞா்களை சிலா் தூண்டிவிடுகின்றனா். இதன் ஒரு பகுதியாக பரேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் மீதும் காவல் துறையும் தடியடி நடத்தியுள்ளது. அதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் நமது அமைப்பின் இளைஞா்கள் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த விவகாரத்தில் நடுநிலையைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகம் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டால் விரைவில் இயல்புநிலை திரும்பும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com