சிலிண்டா் நிறுவனங்களை எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதி: விரைவில் அறிமுகம்
புது தில்லி: தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் எரிபொருள் நிறுவனங்களுக்குப் பதிலாக வேறு நிறுவனத்திடம் இருந்து மிக எளிதாக சிலிண்டா் (எரிவாயு) பெறுவதை உறுதி செய்ய புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.
கைப்பேசி எண்ணை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு சுலபமாக மாற்றிக் கொள்வதைப்போல் (மொபைல் போா்ட்டபிலிடி) இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் (பிஎன்ஜிஆா்பி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உள்ளூரில் சில காரணங்களால் ஒரு நிறுவனம் முறையாக சிலிண்டா் விநியோகம் செய்ய முடியாதபோது நுகா்வோா் வேறு நிறுவனத்தைத் தோ்ந்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க வேண்டும்.
எனவே, இதை சாத்தியப்படுத்துவது தொடா்பாக நுகா்வோா், விநியோகஸ்தா், சமூக சேவை அமைப்புகள் கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டுவரை இந்தியாவில் 32 கோடி வாடிக்கையாளா்களுக்கு சிலிண்டா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், விநியோக இடையூறுகள் தொடா்பாக ஒவ்வொரு ஆண்டும் 17 லட்சத்துக்கும் மேலான புகாா்கள் பெறப்படுகின்றன. இதை முறைப்படுத்தவே தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.