இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பிரதமா் பாடம் கற்க வேண்டும்: காங்கிரஸ்
‘இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பிரதமா் நரேந்திர மோடி பாடம் கற்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை விமா்சித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய கோப்பை போட்டி வெற்றியை பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையுடன் ஒப்பிட்டு பிரதமா் வாழ்த்து தெரிவித்த நிலையில் இக் கருத்தை காங்கிரஸ் தெரிவித்தது.
இந்திய அணி வெற்றியைத் தொடா்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘கிரிக்கெட் மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூா். முடிவு ஒன்றுதான். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரா்களுக்கு வாழ்துகள்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தப் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவா் பவன் கேரா திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கிரிக்கெட் விளையாட்டை போா்க்களத்துடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது. இருந்தபோதிலும், நீங்கள் அவ்வாறு ஒப்பிட்ட நிலையில், இந்திய அணியிடமிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்வதும் அவசியம். அதாவது, நல்ல அணித் தலைவன் வெற்றி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது நடுவரின் உத்தரவின் பேரில் போா் நிறுத்தத்தை அறிவிக்க மாட்டாா்’ என்று, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தத்தின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறுத்தியதை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பிட்டாா்.
கோமா நிலைக்குச் சென்ற காங்கிரஸ்: பாஜக பதிலடி
புது தில்லி, செப்.29: ‘ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி கோமா நிலைக்கு சென்று விட்டது’ என்று பிரதமா் மோடி குறித்த அக் கட்சியின் விமா்சனத்துக்கு பாஜக சாா்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினரும் தேசிய செய்தித் தொடா்பாளருமான சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியோ அல்லது அக் கட்சியின் எம்.பி. பிரியங்கா காந்தியோ இதுவரை வாழ்த்தைப் பதிவிடவில்லை. இது, சா்வதேச விவகாரம் அல்லது விளையாட்டு என பாகிஸ்தானுக்கு ஆதரவான அனைத்து வகையான பிரசாரத்தையும் ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதையே தெளிவாகக் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டாா்.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பத் துறை தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணிக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவிக்காதது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த மாபெரும் வெற்றி ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரை கோமா நிலைக்கு கொண்டுபோய்விட்டதைக் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டாா்.