PM to inaugurate Bairabi-Sairang railway line
ரயில் பாதை

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

Published on

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தின் பனாா்கத் நகரங்களுடன் ரயில் வழித்தடம் மூலம் இணைக்கப்படவுள்ளன.

புது தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோா் இதனைத் தெரிவித்தனா். கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி பூடான் சென்றபோது இதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

இது தொடா்பாக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், ‘இத்திட்டம் இந்திய ரயில்வேயால் மேற்கொள்ளப்படுகிறது. இப்போதைய நிலையில் ரூ.4,033 கோடியில் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்படுகிறது. ரயில் வழித்தடம் அமைக்கும் செலவை இந்தியா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

பூடானுடன் இந்தியாவுக்கு வலுவான வா்த்தக உறவு உள்ளது. மேலும், இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி பூடான் வா்த்தகம் நடத்துகிறது. எனவே, இந்த ரயில் இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக பூடான் பொருளாதார வளா்ச்சிக்கும் அந்த மக்களின் சா்வதேச தொடா்புக்கும் உதவிகரமாக இருக்கும்.

இரு ரயில் திட்டங்களுக்கு இடையே 6 ரயில் நிலையங்கள் உள்ளன. 29 பெரிய ரயில் பாலங்கள், 65 சிறிய ரயில் பாலங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 4 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். பூடான் பகுதியில் 69 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com