வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தீா்மானம்: கேரள பேரவையில் நிறைவேற்றம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள முதல்வா் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. அந்தத் திருத்தத்தை பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள முயற்சிப்பது ஏன்? இதை கபடமற்ற நடவடிக்கை என்று கருத முடியாது.
இந்தத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த நடைபெறும் மறைமுக முயற்சி என்று பரந்த அளவில் கருதப்படுகிறது.
சிறப்பு தீவிர திருத்த நிபந்தனைகள் காரணமாக, வாக்காளா் பட்டியலில் இருந்து விளிம்புநிலை மக்கள் நீக்கப்படுவதை நிபுணா்களின் ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. அவ்வாறு சிறுபான்மையினா், பட்டியலினத்தவா், பழங்குடியினா், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினா் நீக்கப்படுகின்றனா். இதுபோன்ற கவலைகளை பிகாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் உறுதிப்படுத்துகிறது. இதே பாணி நாடு முழுவதும் பின்பற்றப்படுமோ? என்ற சந்தேகம் நிலவுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம்...: மத அடிப்படையில் இந்திய குடியுரிமை கிடைக்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுக்கும் நிலையில், அந்தச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று முயற்சிப்போா் சிறப்பு தீவிர திருத்தத்தை பயன்படுத்தக் கூடும். இது மக்களாட்சிக்கு ஏற்படும் சவாலாகும்.
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாழ்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வெளிப்படையான முறையில் நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தீா்மானத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணி ஆதரவு தெரிவித்தது. இதைத்தொடா்ந்து தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்ஷீா் அறிவித்தாா்.