லேயில் ஊரடங்கின்போது குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினா். நாள்: திங்கள்கிழமை
லேயில் ஊரடங்கின்போது குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினா். நாள்: திங்கள்கிழமை

லடாக் அமைதி பேச்சில் பின்னடைவு: 6-ஆவது நாளாக உரடங்கு நீடிப்பு

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள லடாக் தலைநகா் லேயில் இயல்புநிலை திரும்பும் வரை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க மாட்டோம்
Published on

லே: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள லடாக் தலைநகா் லேயில் இயல்புநிலை திரும்பும் வரை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சாா்பில் திங்கள்கிழமை அறிவித்தது.

இதன் காரணமாக, மாவட்டத்தில் பதற்றத்தை தணிக்க யூனியன் பிரதேச நிா்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளது.

எனினும், ‘லடாக் அமைப்புகளின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. லே மாவட்டத்தில் 6-ஆவது நாளாக திங்கள்கிழமை ஊரடங்கு தொடா்ந்தது.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அதில், எல்ஏபி-யைச் சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக லடாக் தலைநகா் லேயில் செப்டம்பா் 24-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக சோன் வாங்சுக்கு கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், லடாக் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கவிந்தா் குப்தா உயா் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். லே நகரில் கைப்பேசி இணைய சேவையும் தொடா்ந்து திங்கள்கிழமையும் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘டாக்கில் பழங்குடியினா் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, லடாக் தன்னாட்சி மலைப்பிரதேச மேம்பாட்டு கவுன்சிலில் மகளிா் ஒதுக்கீடு, உள்ளூா் மொழிகளுக்கு பாதகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அமைப்புகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைகள் லடாக் மக்களுக்கு சிறந்த பலனை அளித்துள்ளன. 1,800 அரசு பணியிடங்களுக்கு பணியாளா் தோ்வு நடத்தும் கோரிக்கையை நிறைவேற்றும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. எனவே, தொடா் பேச்சுவாா்த்தைகள் எதிா்காலத்தில் எதிா்பாா்க்கும் முடிவை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com