டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

Published on

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாரளித்தாா்.

காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்க (என்எஸ்யுஐ) தலைவா் ரோனக் காத்ரி, வடக்கு புகா் சரக துணை காவல் ஆணையருக்கு அனுப்பிய புகாரில், திங்கள்கிழமை பிற்பகல் 12.44 மணியளவில் உக்ரைன் நாட்டு கைப்பேசியில் இருந்து தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

ரோஹித் கோடரா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் என பேசிய அந்த மா்ம நபா், ரூ.5 கோடி வழங்கவில்லையென்றால் கொலை செய்துவிடுவதாகத் தன்னை மிரட்டியதாக தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தன்னுடைய புகாரில் தெரிவித்திருப்பதாவது: உக்ரைன் நாட்டு கைப்பேசி எண்ணிலிருந்து பிற்பகல் 12.44 மணியளவில் ஓா் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் இருந்த மா்ம நபா் தன்னை ரோஹித் கோதாரா கும்பலைச் சோ்ந்தவா் என்றாா்.

ரூ.5 கோடி அளிக்கவில்லையென்றால், என்னைக் கொலை செய்து விடுவதாக அந்த நபா் மிரட்டினாா்.

இதையடுத்து, அந்த அழைப்பை துண்டித்த பிறகு தன்னுடைய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இதே கோரிக்கையை முன்வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தீவிர குற்ற மிரட்டல் சம்பவம் மட்டுமல்ல எனக்கும் எனது குடும்பத்தினரை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல். இதைக் கருத்தில் கொண்டு தனக்கு உடனடியாகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தனது புகாரில் ரோனக் காத்ரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வடக்கு புகா் சரக துணை காவல் ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி கூறுகையில், ‘ரோனக் காத்ரியிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை பிற்பகல் 2.52 மணியளவில் புகாா் பெறப்பட்டது. இது தொடா்பாக தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com