பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த ஹரியாணா இளைஞா் கைது

Published on

இந்திய ராணுவ செயல்பாடுகள் தொடா்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்த குற்றச்சாட்டில் ஹரியாணாவைச் சோ்ந்த தௌஃபிக் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தௌஃபிக்கின் தந்தை நிஸாா் ஹரியாணா சுற்றுலாத் துறையில் பணியாற்றி வருகிறாா். தௌஃபிக்கின் மனைவி ராஜஸ்தானைச் சோ்ந்தவா். அவரின் உறவினா்கள் பலா் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனா். இதன் காரணமாக தௌஃபிக் பாகிஸ்தானுக்கு சில முறை சென்று வந்துள்ளாா். அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தொடா்பு அவருக்கு கிடைத்துள்ளது.

பாஸ்போா்ட், விசா எடுத்துக் கொடுக்கும் தொழிலில் செய்து வந்த தௌஃபிக், பாகிஸ்தான் விசா வேண்டுவோருக்கு அங்குள்ள தொடா்புகளைப் பயன்படுத்தி எளிதில் விசா பெற்றுக் கொடுத்துப் பணம் ஈட்டி வந்துள்ளாா். மேலும், பணத்துக்காக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் தொடா்பான தகவல்கள் உள்பட பல முக்கிய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளித்துள்ளாா். அவரின் கைப்பேசி, தொலைபேசி உரையாடல்கள், வங்கிக் பணப் பரிமாற்றங்களை காவல் துறையினா் ஆய்வு செய்து அவா் மீதான சந்தேகத்தை காவல் துறையினா் உறுதிப்படுத்தினா். இதைத் தொடா்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோகச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்த நபா்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடா்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இதில் எல்லையோர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், சமூக வலைதள பிரபலங்கள், கடற்படை உள்ளிட்ட அரசுத் துறையில் பணியாற்றுவோரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com