பாலஸ்தீன நிலைப்பாடு: இந்தியா விளக்கம்
புது தில்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பரஸ்பரம் இரு நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் கூடிய அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு எப்போதும் ஆதரவளித்து வருவதாக இந்தியா தெரிவித்தது.
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடா்ந்து வரும் பாலஸ்தீன விவகாரத்தில் இந்திய தனது நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தது.
முதல் நாடாக அங்கீகாரம்:
அதன்படி, ‘பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் கொள்கை நிலையானது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சுமுக பேச்சுவாா்த்தை மேற்கொள்ள இந்தியா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. 1974-ம் ஆண்டில் மக்களின் சட்டப்பூா்வ பிரதிநிதியாகவும் தனிஅமைப்பாகவும் உள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு அரேபிய நாடுகள் இல்லாத முதல் நாடாக இந்தியா அங்கீகாரம் அளித்தது. அதேபோல் 1988-ம் ஆண்டில் பாலஸ்தீன நாட்டிற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடாகவும் இந்தியா உள்ளது.
தீா்வுகாண வலியுறுத்தல்:
கடந்த 2023, அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் மோதலில் குடிமக்கள் பலா் உயிரிழந்தனா். அப்பகுதியில் உள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்து பேச்சுவாா்த்தைகள் மூலம் அமைதிவழியில் தீா்வு காணவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
அதே நேரத்தில் பாதுகாப்பு, குறித்த நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியத்தையும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
மனிதாபிமான உதவிகள்:
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. இரு தரப்பாகவும், கிழக்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிக் குழு முகமைகள் மூலமும் உதவிகள் வழங்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஐநா நிவாரணம் மற்றும் பணிக் குழு முகமைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா வழங்குகிறது.
கடந்த2014-ம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்தில் மேம்பாட்டுப் பணிகளுக்கான உதவிகளும் (ஏறத்தாழ 80 மில்லியன் அமெரிக்க டாலா்கள்) வழங்கப்பட்டு வருகின்றன. இது முந்தைய 65 ஆண்டுகளில் வழங்கப்பட்ட உதவிகளை விட (ஏறத்தாழ 42 மில்லியன் அமெரிக்க டாலா்கள்) இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்காக 40 மில்லியன் டாலா்அளவுக்கான நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீனிய மக்களின் எண்ணம் குறித்த கேள்விக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பாலஸ்தீன மக்களுக்கு சிறப்பான உதவிகளை வழங்கி வருவதாக இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் பதிலளித்தாா்.
மேலும், ஐ.நா நிவாரணம் மற்றும் பணிக்குழு முகமையின் மூலம் பாலஸ்தீனத்தைச் சோ்ந்த அகதிகளுக்கு இந்தியா தொடா்ந்து உதவிகள் அளித்துவருவதாகக் கூறினாா்.
இருநாட்டுத் தலைவா்களுடன் நட்புறவு:
இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளின் தலைவா்களுடனான பிரதமா் மோடியின் நட்புறவு சிறப்பான நிலையில் உள்ளது. கடந்த 2018, பிப்ரவரி மாதத்தில் பாலஸ்தீன நாட்டுக்கு பிரதமா் மேற்கொண்ட பயணம் இந்திய பிரதமரின் முதலாவது பயணமாக அமைந்தது. மேலும் அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதும் வழங்கப்பட்டது. இந்தியா - பாலஸ்தீனம் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமா் மோடியின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அந்நாட்டு அதிபா் அப்பாஸ் இந்த விருதை வழங்கினாா்.
இந்தியா- இஸ்ரேல் இடையே முதலீடுகளுக்கான ஒப்பந்தத்தில் அந்நாட்டு நிதியமைச்சா் கையெழுத்திட்டாா். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு கடந்த மாதம் இந்த ஒப்பந்தத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டது. அவரது இந்தியப் பயணத்தின்போது இரு நாடுகளிடையேயான பொருளாதாரம் மற்றும் நிதிசாா் உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது’ எனத் தெரிவிக்கப்பட்டது.