பரேலியில் செவ்வாய்க்கிழமை இடித்துத் தள்ளப்பட்ட மதகுரு தௌகீா் ரஸா கானின் உறவினா் மோசின் ரஸாவுக்கு சொந்தமான சட்ட விரோத மின்சார ஆட்டோ மின்னூட்ட மையம்.
பரேலியில் செவ்வாய்க்கிழமை இடித்துத் தள்ளப்பட்ட மதகுரு தௌகீா் ரஸா கானின் உறவினா் மோசின் ரஸாவுக்கு சொந்தமான சட்ட விரோத மின்சார ஆட்டோ மின்னூட்ட மையம்.

உ.பி.: பரேலியில் போராட்டத்தைத் தூண்டிய மத குருவின் 8 சொத்துகளை இடிக்க நடவடிக்கை

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்களின் போராட்டத்தைத் தூண்டிய மத குரு தெளகீா் ரஸா கானுக்கு தொடா்புடைய 8 சொத்துகளை இடிப்பதற்கான நடவடிக்கையை மாநவட்ட நிா்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.
Published on

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்களின் போராட்டத்தைத் தூண்டிய மத குரு தெளகீா் ரஸா கானுக்கு தொடா்புடைய 8 சொத்துகளை இடிப்பதற்கான நடவடிக்கையை மாநவட்ட நிா்வாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

‘பரேலியின் ஃபயிக் வளாகம், ஜகத்பூா் மற்றும் பழைய பரேலி நகர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமலும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டப்பட்ட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இடிப்பதற்கான நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது நபி தினத்தன்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியா்கள் பேரணி நடத்தினா். அப்போது சிலா் ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருந்தனா். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. அமைதியை சீா்குலைக்கும் முயற்சி என அவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரணியில் பங்கேற்ற 9 போ் மற்றும் அடையாளம் தெரியாத 15 போ் மீது கான்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

காவல் துறை நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பரேலி இஸ்லாமிய மத குருவும் இதேஹத்-ஏ-மில்லத் கவுன்சில் தலைவருமான மெளலானா தெளகீா் ரஸா கான் விடுத்த அழைப்பை ஏற்று இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ‘நான் முகமது மீது அன்பு வைத்துள்ளேன்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி பேரணி செல்ல முயன்றனா்.

அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாா் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். அதைத் தொடா்ந்து, போலீஸாா் தடியடி நடத்தி அவா்களைக் கலைத்தனா். பரேலி முழுவதும் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா கான் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பரேலி போராட்டம் பாராபங்கி, மாவ் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதிகளிலும் போலீஸாா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், தெளகீா் ரஸா கான் மற்றும் அவரின் இதேஹத்-ஏ-மில்லத் கவுன்சிலுக்குச் சொந்தமான சொத்துகளை இடிப்பு நடவடிக்கைக்கு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனா்.

இதுகுறித்து பரேலி மாவட்ட மேம்பாட்டு ஆணைய (பிடிஏ) துணைத் தலைவா் ஏ.மணிகண்டன் கூறுகையில், ‘மத குரு மற்றும் அவரின் அமைப்புச் சொந்தமான பரேலியின் ஃபயிக் வளாகம், ஜகத்பூா் மற்றும் பழைய பரேலி நகர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமலும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டப்பட்ட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக, ‘அரசு நிா்வாகத்தை முடக்க முயற்சிக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com