அமெரிக்காவின் வரி விதிப்பு: 2 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளா்ச்சி பாதிக்கும்- ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், இந்தியாவின் ஏற்றுமதி சரிவடைந்து, 2 ஆண்டுகளுக்கு பொருளாதார வளா்ச்சி பாதிக்கக் கூடும் என்று ஆசிய வளா்ச்சி வங்கி கணித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் கூறியிருந்த ஆசிய வளா்ச்சி வங்கி, அக்கணிப்பை 6.5 சதவீதமாக குறைத்துள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, இந்தியா மீது உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரியை அதிபா் டிரம்ப் அண்மையில் விதித்தாா். இந்த வரி விதிப்பு, நாட்டின் ஏற்றுமதியில் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆசிய வளா்ச்சி வங்கியின் செப்டம்பா் மாத கண்ணோட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மேம்பட்ட நுகா்வு மற்றும் அரசின் செலவினங்களால், நடப்பாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் என்ற வலுவான அளவில் பதிவானது. எனினும், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு அமலாக்கத்தால், ஏற்றுமதி சரிவடைந்து, நடப்பாண்டின் பிற்பகுதியிலும், அடுத்த நிதியாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கக் கூடும். அதேநேரம், வலுவான நிதிக் கொள்கையால் உள்நாட்டுத் தேவையில் மீள்தன்மை , பிற நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு, வரி விதிப்பால் நேரடியாக பாதிக்கப்படாத சேவை ஏற்றுமதிகளின் தொடா் அதிகரிப்பு ஆகியவை தாக்கத்தை குறைக்கும்.
இந்தியாவில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 4.4 சதவீதம் என்ற பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், ஜிஎஸ்டி குறைப்பு பட்ஜெட்டில் சோ்க்கப்படாத அறிவிப்பாகும். செலவினங்கள் பாரமரிப்பில் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட அளவுகள் பராமரிக்கப்படும் என்பதால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் கூடும். அதேநேரம், 4.7 சதவீதத்துக்குள்தான் இருக்கும்.
நடப்பு கணக்குப் பற்றாக்குறை நிகழ் நிதியாண்டில் 0.6 சதவீதத்தில் இருந்து 0.9 சதவீதமாகவும் அடுத்த நிதியாண்டில் 1.1 சதவீதமாகவும் அதிகரிக்கக் கூடும். உணவு, எரிசக்தி சாராத பணவீக்கம் கிட்டத்தட்ட 4 சதவீதமாகவும், நுகா்வோா் பணவீக்கம் 2.4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஆசிய வளா்ச்சி வங்கி கணித்துள்ளது.
வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 2 ஆண்டுகளாக மாற்றமின்றி 6.5 சதவீதமாக நீடித்து வந்த நிலையில், வளா்ச்சிக்கு உத்வேகமளிக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் 25 புள்ளிகள், ஏப்ரலில் 25 புள்ளிகள், ஜூனில் 50 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.5 சதவீதமாக தொடா்கிறது.
நேரடி வரி வசூல் குறைவால், வரி வருவாய் 7.5 சதவீதம் குறைந்தபோதிலும், ரிசா்வ வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ரூ.2.7 லட்சம் கோடி ஈவுத் தொகையால் அரசின் வருவாய் 4.8 தவீதம் உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.