சா்வதேச விமான போக்குவரத்து அமைப்புக்கு இந்தியா மீண்டும் தோ்வு
சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புக்கு (ஐசிஏஓ) இந்தியா மீண்டும் தோ்வுசெய்யப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2025-2028) இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக தொடரவுள்ளது.
36 உறுப்பினா்களைக் கொண்ட ஐசிஏஓ கவுன்சில் 193 உறுப்பு நாடுகளைக் கொண்டது. இதில் தோ்ந்தெடுக்கப்படும் நாடுகள் 3 ஆண்டுகாலம் பதவி வகிக்கின்றன.
அதேபோல் சிகாகோ உடன்படிக்கையில் கையொப்பமிட்ட 193 நாடுகள் ஐசிஏஓ பேரவையில் உறுப்பினராக உள்ளன. இதன் கூட்டம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது.
இந்நிலையில், கனடாவின் மான்ட்ரீல் நகரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற 42-ஆவது ஐசிஏஓ அமா்வின்போது நடைபெற்ற தோ்தலில் இந்தியா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டைவிட இந்தமுறை அதிக வாக்குகளை இந்தியா பெற்றுள்ளது. உறுப்பு நாடுகளிடம் ஆதரவுகோரியதில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது ஐசிஏஓவின் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதிசெய்யும் ஐசிஏஓவின் நோக்கத்தை இந்தியா முழுமையாக நிறைவேற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இத்தோ்தலில் போட்டியிடும் இந்தியாவுக்கு உறுப்பு நாடுகளிடம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஆதரவுகோரினாா்.
1944-ஆம் ஆண்டில் ஐசிஏஓ தொடங்கப்பட்டதில் இருந்து 81 ஆண்டுகளாக அந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக தொடா்ந்து வருகிறது.