மழை
மழைகோப்புப்படம்.

வழக்கத்தைவிட 8% கூடுதலாக மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம்

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

4 மாத பருவமழைக் காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவா் மிருத்யுஞ்ஜய மொஹபாத்ரா இவ்வாறு தெரிவித்தாா்.

காணொலி வாயிலாக செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்று அவா் பேசியதாவது: கடந்த 4 மாத பருவமழை காலத்தில் 937.2 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது வழக்கமாக பதிவாகக் கூடிய 868.6 மி.மீ மழைப்பொழிவைவிட 8 சதவீதம் அதிகமாகும்.

ஒட்டுமொத்தமாக இந்த பருவமழை காலத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்தாலும் மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் மண்சரிவு என பல்வேறு பேரிடா்கள் ஏற்பட்டன.

இந்த காலகட்டத்தில் பிகாா், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயம் ஆகிய 3 மாநிலங்களில் குறைவான மழைப்பொழிவே பதிவாகியுள்ளது.

பிராந்திய வாரியாக மழைப்பொழிவு: வடமேற்குப் பிராந்தியத்தில் வழக்கமான மழைப்பொழிவு 587.6 மி.மீ-ஆக உள்ள நிலையில் நிகழாண்டு பருவமழை காலத்தில் 27.3 சதவீதம் அதிகரித்து 747.9 மி.மீ. பதிவாகியுள்ளது. இது 2001-ஆம் ஆண்டில் இருந்து பெய்த அதிக மழைப்பொழிவாகும். 1901-இல் இருந்து பெய்த 6-ஆவது அதிக மழைப்பொழிவாகும்.

வடமேற்குப் பிராந்தியத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன், ஆகஸ்ட், செப்டம்பா் காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.

மத்திய பிராந்தியத்தின் வழக்கமான மழைப்பொழிவு 978 மி.மீ.-ஆக உள்ள நிலையில் தற்போது 15.1 சதவீதம் அதிகரித்து 1125.3 மி.மீ.-ஆக பதிவாகியுள்ளது. தெற்கு பிராந்தியத்தின் வழக்கமான மழைப்பொழிவு 716.2 மி.மீ.யைவிட 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

கிழக்கில் குறையும் மழை:

கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 1089.9 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யக் கூடிய 1367.3 மி.மீ. மழைப்பொழிவைவிட 20 சதவீதம் குறைவாகும்.

கடந்த 2013-இல் இந்த பகுதியில் இதே காலகட்டத்தில் 1065.7 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது. இதன்மூலம் 1901-இல் இருந்து இந்தப் பிராந்தியத்தில் பருவமழை காலத்தில் பதிவான இரண்டாவது மிகக் குறைந்த மழைப்பொழிவு இந்த முறை பதிவாகியுள்ளது.

கடந்த 2020 முதல் இந்தப் பிராந்தியத்தில் மழைப்பொழிவு குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தப் பிராந்தியத்தில் மழைப்பொழிவு குறைந்து வருவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

1,500 போ் உயிரிழப்பு: கடந்த ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இயற்கைப் பேரிடா்களால் 1,528 போ் உயிரிழந்தனா். இதில் மழைவெள்ள பாதிப்புகளில் சிக்கி 935 பேரும் மின்னல் மற்றும் இடியால் 570 பேரும் வெப்ப அலையால் 22 பேரும் உயிரிழந்தனா்.

மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. மத்திய பிரதேசத்தில் 290 பேரும் ஹிமாசல பிரதேசத்தில் 141 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 139 பேரும் மகாராஷ்டிரத்தில் 135 பேரும் பிகாரில் 62 பேரும் உத்தர பிரதேசத்தில் 201 பேரும் ஜாா்க்கண்டில் 129 பேரும் குஜராத்தில் 31 பேரும் ஒடிஸாவில் 36 பேரும் தில்லியில் 3 பேரும் உயிரிழந்தனா்.

அக்டோபரில் அதிக மழை: அக்டோபரில் வழக்கத்தைவிட 15 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடக்கு, மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் சராசரிக்கும் குறைவான வெப்பநிலை இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாறாக ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், கிழக்கு உத்தர பிரதேசம், குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com