
நமது நிருபர்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தேர்ச்சிப் பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் 2010-ஆம் ஆண்டில் குறைந்தபட்ச தகுதிகளை விதித்தது. அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அறிமுகப்படுத்தியது.
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு அவசியமா? என தமிழ்நாடு, மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செப்.1-இல் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம், "ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்குமேல் உள்ள ஆசிரியர்கள் பணியில் நீடிக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற விரும்பாதவர்கள் அல்லது தகுதி பெற முடியாதவர்கள் ஆசிரியர் பணியை ராஜிநாமா செய்யலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம். ஓய்வு பெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு இல்லாமல் பணியில் தொடரலாம்' என்று குறிப்பிட்டிருந்தது.
எனினும், இந்தத் தீர்ப்பு சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்திற்கு பொருந்துமா என்பதைக் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தை பொருத்தவரை அது மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது என்றும், பல ஆண்டுகளாக ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.