
நமது நிருபர்
புது தில்லி, செப்.30: மூத்த பாஜக தலைவரும் தில்லி பாஜகவின் முதல் தலைவருமான வி.கே. மல்ஹோத்ரா (93) செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
தில்லியில் இருந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்ஹோத்ரா, கடந்த சில நாள்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தில்லி பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த அவர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். 2008 தில்லி பேரவைத் தேர்தலின்போது கட்சியின் முதல்வர் முகமாக மல்ஹோத்ரா முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரது உடல் புதன்கிழமை (அக்.1) பிற்பகல் 12 முதல் 2 மணி வரை பண்டிட் பந்த் மார்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், லோதி சாலை மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
மல்ஹோத்ரா மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவையொட்டி திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ள தில்லி அரசு, ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மல்ஹோத்ராவின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, பொது வாழ்க்கையில் மல்ஹோத்ராவின் பங்களிப்பைப் பாராட்டி பிரதமர் மோடி "எக்ஸ்' சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: மல்ஹோத்ரா ஒரு சிறந்த தலைவராக தன்னை வேறுபடுத்திக் கொண்டவர்; மக்களின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர். தில்லியில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட விவாதங்களுக்காக அவர் நினைவுகூரப்படுகிறார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் "எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், "மல்ஹோத்ரா ஒரு சிறந்த தலைவர். மக்களின் கவலைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்காகப் பரவலாக அவர் மதிக்கப்பட்டார். விளையாட்டு, நிர்வாகம் உள்பட பொது வாழ்க்கைக்கு மல்ஹோத்ரா அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட இரங்கல் பதிவில், "தில்லி பாஜகவின் மூத்த தலைவரான வி. கே. மல்ஹோத்ராவின் மறைவு செய்தி மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.