உயிரி மருந்து உற்பத்திக்கு ரூ.10,000 கோடியில் புதிய திட்டம்
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை உயிரி மருந்து உற்பத்தி மையமாக உருவாக்கும் நோக்கில், ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் ‘பயோஃபாா்மா சக்தி’ என்ற புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரி மருந்துகள் எனப்படுபவை செயற்கையான ரசாயன வழிமுறையில் அல்லாமல் உயிரினங்கள், செல்கள் அல்லது திசுக்களில் இருந்து தயாரிக்கப்படும் கூட்டு மருந்துகளாகும்.
இது தொடா்பாக, மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: சா்க்கரை நோய், புற்றுநோய், தன்னெதிா்ப்பு நோய் போன்ற தொற்றா நோய்களே இப்போது நாட்டுக்குப் பெரும் சுமையாக மாறி வருகின்றன.
எனவே, குறைந்த செலவில் நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் உயிரி மருந்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை உயிரி மருந்துகளின் உற்பத்தி மையமாக உருவாக்கும் நோக்கத்துடன் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் பயோஃபாா்மா சக்தி (அறிவு, தொழில்நுட்பம், புத்தாக்கத்தின் மூலம் சுகாதார மேம்பாட்டுக்கான வியூகம்) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
உள்நாட்டில் உயிரி மருந்து உற்பத்திக்கு உகந்த சூழலை மேம்படுத்தும் இத்திட்டத்தின்கீழ், புதிதாக மூன்று தேசிய மருந்துசாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாக்கப்படும்; ஏற்கெனவே உள்ள 7 நிறுவனங்களும் மேம்படுத்தப்படும். 1,000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற இந்திய மருத்துவ பரிசோதனைத் தளங்களின் கட்டமைப்பு உருவாக்கப்படுவதுடன், உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வலுப்படுத்தப்படும் என்றாா் நிா்மலா சீதாராமன்.
புதிதாக 3 அகில இந்திய ஆயுா்வேத நிறுவனங்கள்
பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், நாட்டில் புதிதாக 3 அகில இந்திய ஆயுா்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ் துறைக்கு ரூ.4,408 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; கடந்த பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது 20 சதவீத அதிகரிப்பாகும்.
‘கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆயுா்வேத மருத்துவ முறை உலக அளவில் ஏற்கப்பட்டு, அங்கீகாரம் பெற்றுள்ளது. வளா்ந்துவரும் தேவைக்கு ஏற்ப புதிதாக 3 அகில இந்திய ஆயுா்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும்.
ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்கள் உயா் தரநிலைகளுடன் மேம்படுத்தப்படும். தரமான ஆயுா்வேத மருந்துகளின் தயாரிப்பு, விவசாயிகள் மூலிகைச் செடிகளை வளா்க்கவும், மருந்துகளின் பதப்படுத்துதலில் இளைஞா்கள் ஈடுபடவும் ஊக்குவிக்கும்’ என்றாா் நிா்மலா சீதாராமன்.

