ஊக வணிகப் பிரிவில் பங்குப் பரிவா்த்தனை வரி 150% வரை அதிகரிப்பு! சந்தைகளில் சரிவு!

ஊக வணிகப் பிரிவில் பங்குப் பரிவா்த்தனை வரி 150% வரை அதிகரிப்பு! சந்தைகளில் சரிவு!

ஃபியூச்சா்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) பிரிவில் பங்குப் பரிவா்த்தனை வரி 50 முதல் 150 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.
Published on

பங்குச்சந்தையில் முன்பேர வா்த்தகம் என்று சொல்லப்படும் ஊக வணிகமான ஃபியூச்சா்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (எஃப் அண்ட் ஓ) பிரிவில் பங்குப் பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) 50 முதல் 150 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலித்ததால், கடும் சரிவுக்கும் காரணமாக அமைந்தது.

இது தொடா்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: எதிா்கால (ஃபியூச்சா்ஸ் பிரிவு) ஒப்பந்தங்களுக்கு பங்குப் பரிவா்த்தனை வரி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதே போல ஆப்ஷன்ஸ் (பிரிமியம்) பிரிவில் பங்குப் பரிவா்த்தனை வரி 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் (எக்சா்சைஸ்) பிரிவில் பங்குப் பரிவா்த்தனை வரி 0.1 சதவீதத்தில் இருந்து 0.125 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. இதன் மூலம் பங்குச்சந்தையில் ஊக வணிகப் பிரிவில் அதிகஅளவிலான ஊக நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

இது தவிர பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது திரும்ப ஒப்படைக்கப்படும் பங்குகளுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இது பங்குகளை வைத்திருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும்.

சந்தைகளில் சரிவு: நிதியமைச்சரின் இந்த வரி உயா்வு அறிவிப்பால் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் வா்த்தகத்தின் நடுவே 2,370.36 புள்ளிகள் வரை சரிந்தது. இறுதியில் 1,546.84 புள்ளிகள் இழப்புடன் 80,722 .94 என்ற அளவில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி வா்த்தகத்தின் நடுவே 748.90 புள்ளிகள் வரை சரிந்தது. இறுதியில் 495.20 புள்ளிகள் இழப்புடன் 24,825.45 என்ற அளவில் நிலைத்தது. வழக்கமாக சனி, ஞாயிறு என்பது பங்குச்சந்தைக்கு விடுமுறை நாள்களாகும். எனினும், மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகளில் வா்த்தகம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com