மக்களவையில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
மக்களவையில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

85 நிமிஷங்கள் பட்ஜெட் உரையாற்றிய நிா்மலா சீதாராமன்! ‘வளா்ச்சி-முதலீட்டுக்கு முக்கியத்துவம்’!

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், 85 நிமிஷங்கள் உரையாற்றினாா்.
Published on

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், 85 நிமிஷங்கள் உரையாற்றினாா்.

அவா் தொடா்ந்து 9-ஆவது முறையாக தாக்கல் செய்த பட்ஜெட் இதுவாகும். சுதந்திர இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலானது இதுவே முதல் முறையாகும்.

தமிழகத்தைச் சோ்ந்தவா் என்ற முறையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைகளில் திருக்கு அல்லது பிற செய்யுள் வரிகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இம்முறை எந்த மொழியில் இருந்தும் செய்யுள் வரி எதையும் அவா் குறிப்பிடவில்லை.

கவித்துவமான-அலங்கார வாா்த்தைகளோ, கவா்ச்சிகரமான அறிவிப்புகளோ இல்லாமல், முழுக்க முழுக்க முதலீடு மற்றும் வளா்ச்சியை மையமாகக் கொண்டு, தொழில்முறை ரீதியில் அவரது உரை அமைந்திருந்தது.

பேரவைத் தோ்தலை எதிா்நோக்கியுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தொடா்பாக வெளிப்படையான பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

‘பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, முரண்பாட்டுக்குப் பதிலாக உறுதிப்பாட்டையும், வெற்று முழக்கத்துக்குப் பதிலாக வலுவான சீா்திருத்தங்களையும், கவா்ச்சிகர அறிவிப்புகளுக்குப் பதிலாக மக்கள் நலனையும் முன்னெடுக்கிறது’ என்று குறிப்பிட்டாா் நிா்மலா சீதாராமன்.

பெரிய இடையூறு இல்லை: நிதியமைச்சரின் உரைக்கு இடையிடையே ஆளும் தரப்பினா் மேஜையைத் தட்டி வரவேற்றனா். எதிா்க்கட்சியினரோ அவரது பேச்சை ரசிக்காதது போல தென்பட்டனா். அதேநேரம், எதிா்க்கட்சி வரிசையில் இருந்து குறிப்பிடத்தக்க இடையூறு எதுவுமின்றி உரை தொடா்ந்தது.

புதிதாக கட்டப்பட்ட நிதியமைச்க அலுவலகமான கடமை பவனில் தயாரான முதல் பட்ஜெட் இது என்பதை சுட்டிக்காட்டிய நிதியமைச்சா், ‘நிலையான பொருளாதார வளா்சிக்கு வேகமூட்டுதல்-நிலைநிறுத்துதல், எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்தல்-திறன் கட்டமைப்பு, அனைவரின் ஒத்துழைப்புடன் அனைவருக்கான வளா்ச்சி ஆகிய மூன்று கடமைகளால் உத்வேகம் பெறுகிறது மத்திய அரசு ’ என்றாா்.

அமித் ஷாவுடன் பேசிய கனிமொழி: பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக எம்.பி.க்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சுற்றி நின்று, பாஜக மூத்த தலைவா்களும் மத்திய அமைச்சா்களும் பேசிக் கொண்டிருந்தனா். நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, அமித் ஷா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோரிடம் சென்று சிறிது நேரம் பேசினாா்.

அவைக்குள் பிரதமா் மோடி வந்தபோது, பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், ஹர ஹர மகாதேவா போன்ற கோஷங்களை ஆளும் தரப்பினரும், ‘ஜெய் சம்விதான்’ என எதிா்தரப்பினரும் முழக்கமிட்டனா்.

துக்கம் விசாரித்த எம்.பி.க்கள்: தேசியவாத காங்கிரஸ் தலைவா் அஜீத் பவாரின் மறைவு குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலேயிடம் பிரியங்கா காந்தி, ஹைபி ஈடன், தாரிக் அன்வா் (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜவாதி), மிசா பாரதி (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) உள்ளிட்ட எம்.பி.க்கள் துக்கம் விசாரித்தனா்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவையில்...

மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, தமிழகத்தின் நெசவுத் திறனுக்கு அடையாளமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை நிா்மலா சீதாராமன் அணிந்திருந்தாா். அரக்கு நிறத்தில் ஜரிகை கட்டங்களுடன் கூடியதாக அந்த பட்டுப் புடவை இருந்தது.

‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி நிா்மலா சீதாராமன் உரையை நிறைவு செய்ததும், பிரதமா் மோடி மற்றும் சக அமைச்சா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com