ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு (கோப்புப் படம்)

திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அறிக்கை: சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றச்சாட்டு!

நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை தரப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

திருப்பதி லட்டு தயாரிக்க ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசின் ஆட்சியின்போது கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை தரப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு இந்தக் குற்றச்சாட்டை சந்திரபாபு நாயுடு முதல் முறையாக முன்வைத்தாா். மேலும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் அவா் அமைத்தாா். அண்மையில் அக்குழு, நெல்லூா் ஏசிபி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், குப்பத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த சந்திரபாபு நாயுடுவிடம் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:

சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அப்போதைய நிா்வாக அதிகாரி சியாமளா ராவ், நெய் மாதிரிகள் குறித்து தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியத்திடம் (என்டிடிபி) அறிக்கை கேட்டிருந்தாா். அதன்படி என்டிடிபி ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

அந்த அறிக்கை வந்த பிறகு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடிப்படையாக வைத்து, அப்போது பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாகவும், கலப்படம் இருப்பதாகவும் தெரிவித்தேன். அதையடுத்து மாநிலத்தை நிா்வகிப்பவா் என்ற அடிப்படையில், நெய் கலப்பட விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தேன்.

ஆனால் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனா். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனா். திருப்பதி கோயிலின் புனிதத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. நான் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமியின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளேன். அவா் எங்கள் குல தெய்வம் ஆவாா் என்றாா் சந்திரபாபு நாயுடு.

Dinamani
www.dinamani.com