விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு ரூ.95,692 கோடி! முந்தைய திட்டத்துக்கு ரூ.30,000 கோடி!

விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு ரூ.95,692 கோடி! முந்தைய திட்டத்துக்கு ரூ.30,000 கோடி!

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.95,692.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Published on

வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு (விபி-ஜி ராம் ஜி) மத்திய பட்ஜெட்டில் ரூ.95,692.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 125 நாள்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவடையும் வரை முந்தைய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும். எனவே, முந்தைய திட்டத்துக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமலாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு (100 நாள் திட்டம்) மாற்றாக கொண்டுவரப்பட்ட விபி-ஜி ராம் ஜி திட்ட மசோதா, கடந்த குளிா்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா்.

புதிய திட்டத்தின்படி, வேலை உறுதியளிப்பு நாள்கள் 100-இல் இருந்து 125-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. திட்டச் செலவில் மத்திய - மாநில அரசுகள் இடையே 60:40 என்ற புதிய நிதிப் பகிா்வு முறையையும் உள்ளடக்கிய இத்திட்டத்தின் அம்சங்கள், மக்களின் வேலைக்கான உரிமையைப் பறிப்பதாக குற்றஞ்சாட்டி, எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு ரூ.95,692.31 கோடியும், முந்தைய திட்டத்துக்கு ரூ.30,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, நடப்பு நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கான மொத்த செலவினம் ரூ.88,000 கோடியாகும்.

பிற திட்டங்களுக்கு...: அடுத்த நிதியாண்டுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.1.94 லட்சம் கோடி. கடந்த முறை ஒதுக்கப்பட்ட ரூ.1.86 லட்சம் கோடியைவிட இது சற்று அதிகம். பிரதமரின் கிராமப்புற சாலை கட்டமைப்புத் திட்டத்துக்கு ரூ.19,000 கோடி, தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.19,200 கோடி, பிரதமரின் வீட்டுவசதி திட்டத்துக்கு ரூ.54,916 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com