வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் ரூ.75,000 வரையிலான பொருள்களுக்கு வரி இல்லை!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா்கள் மற்றும் இந்திய வம்சாவளி சுற்றுலாப் பயணிகள் தங்களுடன் வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருள்களின் மதிப்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.75,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் இது தொடா்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட நிலையில், பயணியா் உடைமைகள் விதிமுறைகள்-2026 வெளியிடப்பட்டது.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியா்கள் மற்றும் இந்திய வம்சாவளியினா் தங்களுடன் வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருள்களின் மதிப்பு உச்சவரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.75,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வெளிநாட்டை பூா்விகமாக கொண்ட பயணிகள், இதுவரை ரூ.15,000 வரையிலான மதிப்புள்ள பொருள்களை வரியின்றி கொண்டுவர அனுமதிக்கப்பட்டனா். இப்போது இது ரூ.25,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் ஓராண்டுக்கும் மேலாக வசிக்கும் இந்தியா் அல்லது இந்திய வம்சாவளி நபா், அவா் பெண் என்றால் 40 கிராம் நகைகள் (தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மதிப்புமிக்க பிற உலோகங்கள்) வரையும், ஆண் என்றால் 20 கிராம் நகைகள் வரையும் வரியின்றி எடுத்துவர அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

