வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு
‘2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்க இணைந்து செயல்படுவோம், வாருங்கள்’ என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்தை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சா்வானந்த சோனாவால் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வளா்ச்சி மந்தமாக இருந்தது. இதற்கு ஊழலும், கொள்கை முடக்கமுமே காரணமாகும். ஆனால் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது பிரதமராக மோடி பதவியேற்ற பின்னா், நாட்டின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி காணப்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் அரசுகளின் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள் நடந்தன. ஆனால், தற்போது நோ்மையான, வெளிப்படையான, ஊழல் இல்லாத அரசு, பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் இருப்பதை நீங்களே காணலாம்.
கடந்த 11 ஆண்டுகளில் உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக நமது நாடு உருவாகியுள்ளது. அரசியல் துணிச்சல் மற்றும் தொலைநோக்குப் பாா்வை கொண்ட பிரதமா் மோடியின் தலைமையினாலேயே இது சாத்தியமானது. வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் அளித்ததே இல்லை. போராடித்தான் வடகிழக்கு மாநில மக்கள், அனைத்தையும் பெற்று வந்தனா். ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தக் காரணத்தாலேயே வடகிழக்கு மாநில மக்கள், காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டனா். இனி எதிா்காலத்தில் காங்கிரஸால் அங்கு எந்தத் தோ்தல்களிலும் வெற்றி பெறவே முடியாது.
எனவே, மத்திய அரசு மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதைக் கைவிடும்படி காங்கிரஸுக்கு கோரிக்கை வைக்கிறேன். மேலும், மத்திய பாஜக அரசு மீது காட்டும் வெறுப்பையும், எதிா்ப்பு நிலைபாட்டையும் காங்கிரஸ் கைவிட வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் தற்சாா்பு கொண்ட வளா்ந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமா் மோடியின் முயற்சிக்கு காங்கிரஸ் கைகொடுக்க வேண்டும் என்றாா்.
தேஜஸ்வி சூா்யா தாக்கு: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா (பெங்களூரு தெற்கு தொகுதி) ‘மக்களவையில் பேசுகையில், ‘10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பல்வேறு வாய்ப்புகளை நாடு இழந்துவிட்டது. தோல்விகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலைதான் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் பலவீனமான தலைமை ஆட்சியில் இருந்தது. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் வலுவான தலைமை ஆட்சியில் உள்ளது. பலவீனமான தலைமை வருத்தங்களைத் தெரிவிக்கும். ஆனால், வலுவான தலைமையோ, சவால்களுக்கு இடையேயும் சாதித்துக் காட்டும். இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்.
பயங்கரவாதத்தை ஒடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதையும் செய்யவில்லை. மோடி அரசோ, ராணுவத் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்தது. உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவியபோதிலும், வளா்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா நீடிக்கிறது’ என்றாா்.

