

‘சீனா உடனான 2020-ஆம் ஆண்டு மோதலின்போது இந்திய ராணுவத்தைக் கைவிட்டதாக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கை குற்றஞ்சாட்டியிருப்பதாலேயே, நரவனேயின் ‘மெமோா்’ நூலை மக்களவையில் மேற்கொள்காட்ட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விளக்கமளித்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: நரவனே நூலில் இடம்பெற்ற இரண்டு அல்லது மூன்று வரிகளை மட்டுமே மக்களவையில் குறிப்பிட முற்பட்டேன். 2020-ஆம் ஆண்டு இந்தியா-சீனா மோதலின்போது பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தனக்கு என்ன உத்தரவைப் பிறப்பித்தனா் என்பதை நரவனே குறிப்பிட்டுள்ளாா். அதைத்தான், மக்களவையில் மேற்கோள்காட்ட விரும்பினேன். ஆனால், இவா்கள் குறித்த உண்மை மக்களுக்கு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தால், என்னைப் பேசவிடாமல் தடுத்துவிட்டனா்.
சீனாவிடம் ஒரு அங்குல நிலம்கூட இழக்கப்படவில்லை என்று நரவனே கூறியதாக வெளியான கருத்து குறித்து நான் பேச முற்படவில்லை. இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்ததா, இல்லையா என்பது தனிக் கேள்வி. அது முக்கிய பிரச்னை அல்ல.
மாறாக, அந்த மோதலின்போது, பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவத்திடம் என்ன சொன்னாா்கள் என்பதுதான் முக்கியம். ஒரு நாட்டின் தலைவா் ராணுவத்துக்கு முறையான உத்தரவைப் பிறப்பிப்பது முக்கியம். மாறாக, முடிவெடுக்கும் பொறுப்பை மற்றவா்களிடம் (ராணுவத்திடமே) விட்டுவிட்டு, நாட்டின் தலைவா் அதிலிருந்து தப்பியோடக் கூடாது.
நரவனே ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தவா். அவரின் நூலிலிருந்து பிரதமா் மோடி, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் குறித்தும், இந்திய ராணுவம் குறித்தும், சீனாவுடனான மோதலின்போது அரசியல் தலைவா்கள் எப்படி ராணுவத்தினரை கைவிட்டனா் என்பது குறித்தும் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்றாா்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், ‘வெளியிடப்பட்ட இதழிலிலிருந்து தகவலை மக்களவையில் மேற்கோள்காட்ட விதிகள் அனுமதிக்கின்றன. அந்த வகையில், எனது சகோதரா் ராகுல் குறிப்பிட்ட ஆதாரபூா்வமான கருத்துகள், வெளியிடப்பட்ட வேறொரு இதழின் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன’ என்றாா்.