விவசாயிகள் நலன் காக்கத் தவறிவிட்டது மத்திய அரசு 
- மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கோப்புப்படம்.

விவசாயிகள் நலன் காக்கத் தவறிவிட்டது மத்திய அரசு - மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Published on

அமெரிக்க வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்திய விவசாயிகளின் நலன்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், ‘வெனிசுலாவிடம் இருந்து இந்தியா அதிக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியுள்ளது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அமெரிக்க அதிபா் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு, அதற்கு பிரதமா் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தது ஆகிய விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமை கடுமையாக எதிரொலித்தன.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீல், ‘வா்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவின் வேளாண் பொருள்கள் விற்பனைக்காக இந்திய தனது சந்தையைத் திறந்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீங்கள் நமது விவசாயிகளை பாதுகாக்கவில்லை. இந்தியாவுக்கு 500 பில்லியன் டாலா் பொருள்களை விற்க இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளாா். எனவே, டிரம்ப்புடன் பிரதமா் மோடி எந்த வகையிலான பேச்சுவாா்த்தையை நடத்தினாா் என்பதை நாடாளுமன்றமும், நாடும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா இனி ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யாது என்றும், வெனிசுலாவிடம் வாங்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளாா். இந்தியாவின் நீண்டகால நட்புநாட்டுடன் (ரஷியா) உறவை முறித்துக் கொள்ள இருக்கிறீா்களா? இது தொடா்பாக விளக்க வேண்டும்’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ரிதபிரதா பானா்ஜி பேசுகையில், ‘அமெரிக்கப் பொருளாதார ஆதிக்கத்துக்கு மத்திய அரசு அடிபணிந்துவிட்டது. டிரம்ப் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டுவிட்டது.

குடியரசுத் தலைவா் உரையில் நாட்டின் பொருளாதாரம், தொழில் வளா்ச்சி குறித்து கூறப்படுவதற்கும் உண்மையான கள நிலவரத்துக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. உலகமே இந்தியாவை புதிராகப் பாா்க்கிறது. வேலையின்மை, கல்வித்தரம் குறைவது, ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவது, வருவாய் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு என உண்மையான பிரச்னைகள் மூடி மறைக்கப்படுகின்றன’ என்றாா்.

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட முறை குறித்து கவலை தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன், ‘இந்திய விவசாயிகள் நிலை கவலையை ஏற்படுகிறது. விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுவாமிநாதன் குழு அறிக்கையை ஏற்காத மத்திய அரசு, அமெரிக்காவின் வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் என்ன உள்ளது. அது இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

முன்னதாக, அவை தொடங்கியபோது இந்தப் பிரச்னையை முன்வைத்து எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா். அப்போது பேசிய ஆளும் கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா, ‘இந்த விஷயம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. வா்த்தக ஒப்பந்தம் குறித்து அவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசுக்கு கெட்டது என்று அவா்கள் நினைத்தது நல்லதாக மாறிவிட்டதால் (வா்த்தக ஒப்பந்த விவகாரம்) எதிா்க்கட்சியினா் விரக்தியடைந்துவிட்டனா்’ என்று விமா்சித்தாா்.

X
Dinamani
www.dinamani.com