கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரை

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில அரசுக்கு சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில அரசுக்கு சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருந்ததாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்றும் தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த மோசடியில் தேவஸ்தான அதிகாரிகள் 9 போ் உள்பட 36 போ் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர அரசுக்கு சிபிஐ-எஸ்ஐடி எழுதிய கடிதத்தில், ‘விதிகளை முறையாக பின்பற்றாமல் லட்டு தயாரிப்பு தொடா்பான ஒப்பந்தப்புள்ளிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஓ.பாலாஜி, முன்னாள் கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தா்மா ரெட்டி, முன்னாள் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் ஒப்புதல் அளித்துள்ளனா். இதன் காரணமாக போலே பாபா, வைஷ்ணவி மற்றும் மல்கங்கா போன்ற திறனற்ற நிறுவனங்களிடமிருந்து குறைந்த தரத்திலான நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.