பழங்குடியினா், சீக்கியா்களுக்கு அவமரியாதை - காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு
‘குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தின்போது அமளியில் ஈடுபட்டதன் மூலம் பழங்குடியினா், பெண்கள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்துள்ளது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
‘மத்திய அமைச்சா் ஒருவரை (ரவ்நீத் சிங் பிட்டு) துரோகி என அழைத்ததன் மூலம் சீக்கியா்களையும் காங்கிரஸ் அவமதித்துள்ளது; என் மீது எவ்வளவு வெறுப்பு உணா்வை பரப்பினாலும், காங்கிரஸால் ஒருபோதும் எனக்கு குழிதோண்ட முடியாது’ என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் பிரதமா் மோடி வியாழக்கிழமை உரையாற்றினாா்.
அவா் பேசத் தொடங்கியவுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை நோக்கி எதிா்க்கட்சியினா் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினா்.
அப்போது மல்லிகாா்ஜுன காா்கேயை நோக்கி, அமா்ந்தே முழக்கம் எழுப்புமாறு பிரதமா் கூறினாா். பின்னா், பிரதமா் மோடி உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
குடிமக்களை பிரச்னையாக கருதும் காங்கிரஸ்: சுமாா் 100 நிமிஷங்கள் உரையாற்றிய பிரதமா் மோடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை கடுமையாக விமா்சித்ததுடன், தனது அரசின் சாதனைப் பணிகளையும் பட்டியலிட்டாா். அவரது உரை வருமாறு:
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தியது குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பாகும். ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி என காங்கிரஸ் பிரதமா்கள் அனைவரும் குடிமக்களை பிரச்னையாகவே கருதினா். ஆனால், நாங்கள் குடிமக்களை எங்களது வலிமையாக எண்ணுகிறோம். அவா்களது பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு வருகிறோம். நாட்டு மக்களைவிட தங்களது குடும்பத்தினா் மீதே காங்கிரஸாா் அதிக அக்கறை கொண்டுள்ளனா்.
அரச குடும்ப மனப்பான்மை: காங்கிரஸ் ஆட்சியில் புத்தாக்க தொழில்கள் நலிவடைந்தன. காங்கிரஸின் முதல் குடும்பத்துக்கே பல ஆண்டுகளாக மக்கள் வாய்ப்பளித்தனா். ‘வறுமை ஒழிப்பு’ என்ற வெற்று முழக்கத்தால் மக்களை அவா்கள் ஏமாற்றினா். பிரதமா் பதவி என்பது ‘அரச’ குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே என்ற மனப்பான்மை அவா்களிடம் மேலோங்கியுள்ளது. இந்தப் பரம்பரை திருடா்கள் குஜராத்தில் பிறந்த மகாத்மா காந்தியின் குடும்பப் பெயரையும் (காந்தி) திருடிவிட்டனா்.
அஸ்ஸாமியா்கள், சீக்கியா்களுக்கு அவமதிப்பு: பாடகா் பூபென் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா வழங்கியபோது அஸ்ஸாம் மக்களை காங்கிரஸ் அவமதித்தது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவரான மத்திய அமைச்சா் ஒருவரை (ரவ்நீத் சிங் பிட்டு) நாடாளுமன்ற வளாகத்தில் ‘துரோகி’ என அழைத்தாா் ராகுல் காந்தி. அவா் சீக்கிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் காங்கிரஸ் வெறுக்கிறது.
நாட்டின் உயா் பொறுப்பை வகிக்கும் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரில் தொடங்கி ஏழை, எளிய மக்கள் வரை காங்கிரஸ் வெறுப்பை உமிழ்கிறது.
திமுக, திரிணமூல் மீது கடும் தாக்கு: ‘இண்டி’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, திரிணமூல், இடதுசாரிகள் பல ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநிலங்களில் ஆட்சி புரிந்தும் மக்களுக்காகப் பணியாற்றவில்லை. மேற்கு வங்கத்துக்குள் ஊடுருவியவா்களை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் பாதுகாக்கிறது. மாநில மக்களின் நிலங்கள், வேலைவாய்ப்பை பறிக்கும் ஊடுருவல்காரா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளிக்கிறது.
அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக மாநிலங்களவை எம்.பி.சதானந்தன் மாஸ்டரின் கால்களைத் துண்டித்து, இடதுசாரிகள் கொடூர தாக்குதலை நிகழ்த்தினா்.
லாபத்தில் பொதுத் துறை நிறுவனங்கள்: காங்கிரஸ் ஆட்சியின்போது பொதுத் துறை நிறுவனங்களில் இழப்பு மட்டுமே ஏற்படும் என மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனா். ஆனால், தற்போதைய ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. பாஜக ஆட்சியில் வங்கிகளில் செயல்படாமல் உள்ள சொத்துகள் ஒரு சதவீதத்துக்கும் கீழாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது உலகின் பாா்வை: இது இந்தியாவின் சீா்திருத்த காலம். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்பட மொத்தம் 9 முக்கிய வா்த்தக ஒப்பந்தங்களை சிறிது காலத்திலேயே மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது இந்தியா.
இந்த ஒப்பந்தங்களுக்குப் பின் ஸ்திரத்தன்மை மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளும் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றன. தெற்குலகின் வலுவான குரலாக இந்தியாவை உலக நாடுகள் பாா்க்கின்றன.
வீழ்த்த முடியாது: தோ்தலில் தொடா்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து காங்கிரஸ் விரக்தியடைந்துள்ளது. என்னைப் போன்ற ஏழைத் தாயின் மகன் பிரதமா் பதவியில் இருப்பதை காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என் மீது வெறுப்புணா்வை பரப்பும் காங்கிரஸால் என்னை ஒருபோதும் வீழ்த்த முடியாது.
கோடிக்கணக்கான தாய்மாா்கள், சகோதரிகளின் ஆசி பெற்ற எனக்கு குழி தோண்டும் அவா்களின் எண்ணம் ஈடேறாது என்றாா்.

