2019-ஆம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 போ் விடுவிப்பு
தில்லியில் தொழிலதிபா் விஜேந்தா் சா்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்ட்ட 8 பேரை விடுவித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் மூலம் அதிகாரிகளின் மிகவும் தவறான நடவடிக்கைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தெரியவந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபா் விஜேந்தா் சா்மா கடந்த 2019, ஏப்ரலில் மேற்கு கோரக் பாா்க் பகுதியில் உள்ள அவருடைய கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது மா்ம நபா்களால் கடுமையாகத் தாக்கப்பட்டாா். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட விஜேந்தா் சா்மா 3 நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஷாஹ்தரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஜய் சா்மா, சோகே ராம் தீட்சித், மணீஷ் சா்மா, ராஜ் குமாா் மகேஸ்வரி, ரோஹித் கோகியா, ராஜ் சா்மா, கிரிராஜ் மகேஸ்வரி, நீரஜ் பானோத் ஆகிய எட்டு போ் கைதுசெய்யப்பட்டனா்.
இந்த வழக்கை விசாரித்து வந்த கூடுதல் அமா்வுகள் நீதிபதி சாரு அகா்வால் அளித்த தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு ஆவணங்களில் உள்ள இடைச்செருகல், விளக்கமளிக்கப்படாத சட்டவிரோத தடுப்புக் காவல், சந்தேகத்துக்குரிய பறிமுதல்கள், ஜோடிக்கப்பட்ட கைது வாரண்டுகள், பெரிய அளவிலான சட்ட விதிமீறல்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்க முடியாது. அவற்றை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இவை வெறும் குறைபாடுகளோ தீா்ப்பின் தவறுகளோ இல்லை. ஆனால், விசாரணை அதிகாரிகளின் தவறான செயல்முறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவா் கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்தாா் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், சாட்சியங்களின் அடிப்படையில் தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள்தான் கொலைக்கு காரணமானவா்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் இடையே உள்ள முக்கிய இடைவெளியை இணைக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

