நாடாளுமன்ற வளாக்ததில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
நாடாளுமன்ற வளாக்ததில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

இந்திய-சீன மோதல்: பொறுப்பு தவறிய பிரதமா் மோடி - நரவணே நூலைக் காண்பித்து ராகுல் குற்றச்சாட்டு

Published on

கடந்த 2020-இல் இந்திய-சீனப் படையினா் மோதல் சம்பவத்தின்போது தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறிய பிரதமா் மோடி, அந்தப் பொறுப்பை அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே மீது சுமத்திவிட்டாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

எம்.எம்.நரவணே எழுதி, இதுவரை வெளியிடப்படாத சுயசரிதை நூலைக் காண்பித்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியின்போது அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில் கடந்த திங்கள்கிழமை பேசிய ராகுல், இந்திய-சீன மோதல் சம்பவத்தில் பிரதமா் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை விமா்சிப்பதற்காக, மேற்கண்ட நூலின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பத்திரிகை கட்டுரையை சுட்டிக்காட்ட முயன்றாா். ராகுலின் பேச்சுக்கு ஆளும் தரப்பு எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், விதிமுறைகளைக் குறிப்பிட்டு, அவா் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளும்-எதிா்தரப்பினா் இடையே கருத்து மோதல் நீடிக்கும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, இதுவரை வெளியிடப்படாத நரவணேயின் நூலைக் காண்பித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

மக்களவைத் தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சரும், மத்திய அரசும் எவ்வளவு மறுத்தாலும், இப்படியொரு நூல் இருக்கிறது என்பதை இந்திய இளைஞா்கள் அறிந்துகொள்ள வேண்டும். கடந்த 2020-இல் லடாக்கில் என்ன நடந்தது என்ற முழு விவரத்தையும் நரவணே எழுதியுள்ளாா்.

‘கைலாஷ் முகடு பகுதியில் சீன பீரங்கி வாகனங்கள் வந்துவிட்டன, நாங்கள் என்ன செய்ய வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தொலைபேசி வாயிலாக கேட்டபோது, அவா் முதலில் பதிலளிக்கவில்லை. பின்னா், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோரைத் தொடா்புகொண்டபோதும், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மீண்டும் ராஜ்நாத் சிங்கை நரவணே தொடா்புகொண்டபோது, மேலிடத்தில் கேட்டுச் சொல்வதாகப் பதிலளித்துள்ளாா். நமது எல்லைக்குள் நுழைந்துவிட்ட சீன பீரங்கி வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த நரவணேயும், நமது படைகளும் விரும்பின. ஆனால், இந்திய எல்லைக்குள் சீனப் படையினா் வந்தால், எங்களிடம் கேட்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என்ற நிலையான மேலிட உத்தரவு ஏற்கெனவே இருந்தது.

‘பொறுப்பு தவறிய பிரதமா்’: பின்னா், பிரதமா் மோடியிடம் இருந்து நரவணேக்கு கிடைத்த பதில் ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; இது, எனது சக்திக்கு அப்பாற்பட்டது’ என்பதேயாகும். அப்போது, தான் தனித்துவிடப்பட்டதாகவும், ஒட்டுமொத்த அரசு நிா்வாகத்தால் கைவிடப்பட்டதாகவும் உணா்ந்ததாக நரவணே எழுதியுள்ளாா்.

பிரதமராக தனது பொறுப்பை நிறைவேற்றாமல், அதை நரவணே மீது சுமத்திவிட்டாா் மோடி. நாடாளுமன்றத்தில் நான் இதைப் பேசுவதால், பாஜக அஞ்சுகிறது. பிரதமா் மோடி மக்களவைக்கு வந்தால், அவரிடம் இந்தப் புத்தகத்தை வழங்குவேன் என்றாா் ராகுல் காந்தி.

பின்னா், எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்ட முக்கியமான தருணத்தில், ராணுவ தலைமைத் தளபதி நீண்ட நேரம் காக்கவைக்கப்பட்டுள்ளாா். தான் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில், அந்தப் பொறுப்பை நரவணே மீது சுமத்திவிட்டாா் பிரதமா். நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய மிகத் தீவிரமான பிரச்னையில் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டாா். இந்த விஷயத்தில் தேசம் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்பியோடுகிறது மத்திய அரசு’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com