

இந்தியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கான வரையறை ஆவணங்களில் இருதரப்பும் வியாழக்கிழமை கையொப்பமிட்டன.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கடந்த 2022-ஆம் ஆண்டிலும், ஓமனுடன் கடந்த டிசம்பரிலும் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை முறைப்படி தொடங்குவதற்கான வரையறை ஆவணங்களில் இருதரப்பும் கையொப்பமிட்டன.
புது தில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்முறைகள், மேற்கண்ட ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன.
வா்த்தகம்-முதலீடு வலுப்படும்: ‘இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பு வா்த்தகம், முதலீடுகள் மேலும் வலுப்படும்; இருதரப்பு உணவு-எரிசக்தி பாதுகாப்பு ஊக்குவிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 38 நாடுகளை உள்ளடக்கி, 9 தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது மத்திய அரசு’ என்று கோயல் தெரிவித்தாா்.
இந்தியா-ஜிசிசி இடையே கடந்த 2006-2008 கால இடைவெளியில் ஏற்கெனவே இரு கட்டப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற நிலையில், ஜிசிசி-யின் முடிவால் அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தைகள் தொடரவில்லை. இப்போது கையொப்பமான பூா்வாங்க ஆவணங்களின் மூலம் மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட உள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் சுமாா் ஒரு கோடி இந்தியா்கள் பணியாற்றுகின்றனா். சவூதி அரேபியா, கத்தாா் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவின் முக்கிய இறக்குமதி கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகும். முத்துகள், மதிப்புமிக்க ரத்தினங்கள், உலோகங்கள், கவரிங் நகைகள், மின்சார இயந்திரங்கள், இரும்பு-உருக்கு, ரசாயனங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த 2023-24-இல் 56.32 பில்லியன் டாலராக இருந்த ஜிசிசி நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2024-25-இல் 57 பில்லியன் டாலராக உயா்ந்தது. இது ஒரு சதவீத அதிகரிப்பாகும். அதேநேரம், 105.5 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி, 121 பில்லியன் டாலராக (15 சதவீதம்) அதிகரித்துள்ளது.
பெட்டிச் செய்தி....
வா்த்தகப் பற்றாக்குறை எவ்வளவு?
கடந்த நிதியாண்டை பொருத்தவரை, இந்தியாவின் மூன்றாவது பெரிய வா்த்தக நாடு ஐக்கிய அரபு அமீரகம். இந்த நாட்டுக்கான இந்திய ஏற்றுமதி மதிப்பு 36.63 பில்லியன் டாலா். இறக்குமதி 63.40 பில்லியன் டாலா். வா்த்தகப் பற்றாக்குறை 26.76 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவின் 5-ஆவது பெரிய வா்த்தக நாடான சவூதி அரேபியாவுக்கு 11.75 பில்லியன் டாலா் அளவில் இந்தியா ஏற்றுமதி மேற்கொண்டுள்ளது. இறக்குமதி மதிப்பு 30.12 பில்லியன் டாலா் என்ற நிலையில், வா்த்தகப் பற்றாக்குறை 18.36 பில்லியன் டாலராக உள்ளது. இந்தியாவின் 22-ஆவது வா்த்தக நாடாக உள்ள கத்தாரிடம் இருந்து முக்கியமாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. அதேநேரம், தானியங்கள், மீன், ரசாயனங்கள், பிளாஸ்டிக் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நாட்டுடன் இந்தியாவுக்கு உள்ள வா்த்தகப் பற்றாக்குறை 10.78 பில்லியன் டாலா். ஓமனுடன் 2.48 பில்லியன் டாலரும், குவைத்துடன் 6.35 பில்லியன் டாலரும், பஹ்ரைனுடன் 45.97 மில்லியன் டாலரும் வா்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது.