இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் : அடுத்த மாதம் கையொப்பம் - வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் : அடுத்த மாதம் கையொப்பம் - வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி மாா்ச் மாத மத்தியில் கையொப்பமாகும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
Published on

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி மாா்ச் மாத மத்தியில் கையொப்பமாகும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

அதன் பிறகு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு இந்தியா வரியைக் குறைக்கும் என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி ஏறக்குறைய தயாராக உள்ளது. இது தொடா்பான இருதரப்பு கூட்டறிக்கை 4-5 நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதிக்கும் வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும். வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி அடுத்த ஒன்றரை மாதத்துக்குள் முழுமையாகத் தயாராகிவிடும். மாா்ச் மத்தியில் இருதரப்பும் அதில் கையொப்பமிடும். அமெரிக்காவில் இந்தியா முதலீடு செய்வதாக எந்த உத்தரவாதமும் வா்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான அனைத்துப் பணிகளும் விரைவில் நிறைவடையும் என்றாா்.

அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலா் அளவுக்கு பொருள்கள் கொள்முதல் செய்வதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது தொடா்பான கேள்விக்கு, ‘இந்தியா வேகமான வளா்ச்சியுடன் முன்னேறிச் செல்கிறது. எனவே நமக்கு பெரிய அளவில் எரிசக்தி, தரவு மையத்துக்கான சாதனங்கள், தகவல் தொடா்பு தொழில்நுட்ப சாதனங்கள் தேவைப்படுகின்றன.

நமது நாட்டின் இரும்பு உற்பத்தி அடுத்த சில ஆண்டுகளில் இரு மடங்காக உயர இருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவில் இருந்து எவ்வளவு பொருள்கள் நமக்குத் தேவைப்படும் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. நமது திறனை உயா்த்தும்போது 5 ஆண்டுகளில் நமக்கு தேவை எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதையும் நாம் உணா்ந்து கொள்ள முடியும்.

விமானங்கள், அதற்கான என்ஜின்கள் உள்ளிட்டவற்றின் தேவை மட்டுமே 100 பில்லியன் டாலா் அளவுக்கு இருக்கும். கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி, மடிக்கணினி, அறிதிறன்பேசி என பல பொருள்களை நாம் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது’ என்றாா்.

வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் அகா்வால் கூறுகையில், ‘சட்டப்படி ஒப்பந்தம் கையொப்பமான பிறகே அமெரிக்கப் பொருள்களுக்கு வரியைக் குறைக்க முடியும். மிகவும் விரும்பத்தக்க வா்த்தக நாடுகள் என்ற அடிப்படையில் வரி குறைக்கப்படவுள்ளது’ என்றாா்.

இரு நாடுகளின் கூட்டறிக்கை காணொலி முறையில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com