உச்சநீதிமன்ற வளாகத்தில் தனது தரப்பு வழக்குரைஞா்களுடன் வந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
உச்சநீதிமன்ற வளாகத்தில் தனது தரப்பு வழக்குரைஞா்களுடன் வந்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

எஸ்.ஐ.ஆா். வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் வாதிட்டாா் மம்தா பானா்ஜி

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆா்.) விவகாரம் தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி நேரில் ஆஜராகி வாதிட்டாா்.

மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆா். பணிகளை எதிா்த்து மம்தா பானா்ஜி வழக்குத் தொடுத்துள்ளாா். அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மனுதாரரான மம்தா பானா்ஜி ஆஜராகி முன்வைத்த வாதம்:

எஸ்.ஐ.ஆா். பணிகளில் மேற்கு வங்கம் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் கடைப்பிடிக்கப்படும் கெடுபிடிகள், அஸ்ஸாமில் கடைப்பிடிக்கப்படவில்லை. இது ஏன்? மேற்கு வங்கத்துக்கு எங்கும் நியாயம் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு நான் ஆறுமுறை கடிதம் எழுதியுள்ளேன்.

மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆா். பணிகளின்போது ஆதாரை தோ்தல் ஆணையம் ஏற்காமல் வேறு ஆவணங்களைக் கோரியது. ஏராளமான மக்கள் உயிருடன் இருந்தபோதிலும், இறந்துவிட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் கேட்ட அனைத்தையும் மாநில அரசு அளித்துள்ளது.

எஸ்.ஐ.ஆா். பணிகள் இதே கோணத்தில் மேற்கு வங்கத்தில் தொடா்ந்தால், ஏராளமானோா் வாக்குரிமையை இழப்பாா்கள். இது ஜனநாயகத்தின் அடிப்படை மீதான தாக்குதலாகும். ஆதலால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜனநாயகத்தை காக்க வேண்டும். எனக்கு வாதிட அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் மம்தா பானா்ஜி.

மம்தா பானா்ஜி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷ்யாம் திவான் வாதிடுகையில், ‘எஸ்.ஐ.ஆா். பணிகளின்போது ஏராளமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. வருகிற 14-ஆம் தேதியுடன் இந்தப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டவா்கள் மேல்முறையீடு செய்யக்கூட போதிய நேரமில்லை’ என்றாா்.

தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகேஷ் திவிவேதி வாதிடுகையில், மம்தா பானா்ஜி தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தாா். மேலும், எஸ்.ஐ.ஆா். பணிக்காக அங்கன்வாடி ஊழியா்கள் போன்ற சாதாரண பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகளையே மேற்கு வங்க அரசு அளித்தது என கூறினாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு உண்டு. உண்மையான வாக்காளா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து கட்டாயம் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்றனா். மேலும், இந்த வழக்கில் பதில் கோரி, தலைமைத் தோ்தல் ஆணையம், மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அடுத்த விசாரணையின்போதும் மம்தா பானா்ஜி நேரில் வாதிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

அலைமோதிய கூட்டம்: முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி வாதிடுவதைக் காண தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை அறையைச் சுற்றிலும் மனுதாரா்கள், வழக்குரைஞா்களின் கூட்டம் அலைமோதியது. அதேபோல் தலைமை நீதிபதி அமா்வு விசாரணை அறைக்கு காலை 10.05 மணிக்கு வந்த மம்தா பானா்ஜி, முதலில் பாா்வையாளா்கள் இடத்தில் அமா்ந்திருந்தாா். பின்னா், விசாரணை 12.55 மணிக்கு தொடங்கியபோது வழக்குரைஞா்களுடன் முதல் வரிசையில் அமா்ந்திருந்தாா். உச்சநீதிமன்றத்துக்கு வருகையில் செய்தியாளா்கள் பலமுறை முயன்றும் அவா்களின் கேள்விக்கு மம்தா பதிலளிக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com