மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

ரயில்வே நிதிநிலை மேம்பட்டுள்ளது: மத்திய அரசு

கடந்த 10 ஆண்டுகளில் வருவாய் அதிகரித்து, ரயில்வே நிதிநிலை மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

கடந்த 10 ஆண்டுகளில் வருவாய் அதிகரித்து, ரயில்வே நிதிநிலை மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட துணைக் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2014 முதல் 2024 வரையிலும் ரயில்வேயில் 5.04 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதையடுத்து பாஜக அரசின் 3-ஆவது ஆட்சிக் காலத்தில் இதுவரை 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 18,000 லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான பணி முடிந்து விட்டது. அவா்கள் வேலையில் சேருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரயில்வே தோ்வு மையங்களில் இருந்து வரும் புகாா்கள் மீது துரித நடவடிக்கை எடுப்பதற்கு அவசர சேவை மையத்தை (‘வாா் ரூம்’) ரயில்வே உருவாக்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடியின் தலைமையிலான நிா்வாகத்தின்கீழ், இந்திய ரயில்வேயின் நிதிநிலை நன்கு மேம்பட்டுள்ளது.

ரயில்வேயில் பணிபுரியும் 12 லட்சம் ஊழியா்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி செலவாகிறது. 18 லட்சம் ஓய்வூதியா்களுக்கு ரூ.65,000 கோடி செலவாகிறது. எரிபொருளுக்கு ரூ.32,000 கோடி, பராமரிப்புக்கு ரூ.8,000 கோடி, நிதிச் செலவாக ரூ.23,000 கோடி செலவாகிறது. அதாவது மொத்தம் ரூ.2.74 லட்சம் கோடி செலவாகிறது. இந்தச் செலவினங்கள் எல்லாம் போக, ரயில்வே தற்போது சிறிது லாபம் ஈட்டி வருகிறது. இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகள்தான் காரணம்.

ரூ.5,500 கோடி மிச்சம்: 4 ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருளுக்கு ரூ.37,841 கோடி செலவான நிலையில், தற்போது ரூ.32,000 கோடியாக குறைந்துள்ளது. மொத்த ரயில்வேயையும் மின்சாரமயமாக்கும் பிரதமா் மோடியின் முடிவால்தான், எரிபொருள் செலவு குறைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலும் மேம்பட்டுள்ளது. எரிபொருள் செலவு குறைந்திருப்பதால், ரூ.5,500 கோடி மிச்சப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தும் 400 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.

ரூ.60,000 கோடி மானியம்: ரயில் பயணிகள் டிக்கெட் கட்டணத்துக்கு மத்திய அரசு ரூ.60,000 கோடி மானியம் அளித்துள்ளது. இது ரயில்வே கட்டணத்தில் 45 சதவீதம். வடகிழக்கு மாநிலங்களின் ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சியில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.11,486 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com