தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரமாகும் ஏஐ அச்சுறுத்தல்: உள்துறை உயரதிகாரிகளுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பாணை!
நமது சிறப்பு நிருபா்
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப பயன்பாட்டை தவறாகப் பயன்படுத்தி மோசடி மற்றும் தவறான தகவல்களை பரப்பும் செயல்களை மத்திய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. இந்த விவகாரத்துடன் தொடா்புடையதாக எட்டு தலைப்புகளைத் தோ்வு செய்து அவற்றை தனது அடுத்தடுத்த கூட்டங்களில் விவாதிக்க நிலைக்குழு தீா்மானித்துள்ளதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் டாக்டா் ராதா மோகன் தாஸ் அகா்வால் உள்ளாா். இவரது தலைமையிலான குழுவில் தமிழகத்தில் இருந்து திமுகவைச் சோ்ந்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், தில்லியில் இருந்து மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் உள்பட 31 போ் இடம்பெற்றுள்ளனா்.
எம்.பி.க்கள் கேள்வி: இக்குழு அண்மையில் ‘கணினிக் குற்றம் - அதன் விளைவுகள், பாதுகாப்பு மற்றும் தடுப்பு’ என்ற தலைப்பில் சைபா் குற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து ஆய்வு செய்தது. அப்போது, அரசியல் தலைவா்கள் காணொளியில் தோன்றி சா்ச்சைக்குரிய வகையில் பேசுவது போன்ற தவறான தகவல்கள் ஏஐ மூலம் சமூக ஊடகங்களில் பரவுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து சில உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.
இதன் தொடா்ச்சியாக உள்நாட்டுப்பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தடுக்கும் செயல்பாடுகளை ஆராய இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூன்று கூட்டங்களுக்கு நிலைக்குழுவின் தலைவா் ராதா மோகன் அழைப்பு விடுத்துள்ளாா். முதல் இரண்டு கூட்டங்கள் பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளிலும், மூன்றாவது கூட்டம் பிப்ரவரி 24ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ள வருமாறு மத்திய உள்துறைச் செயலா், மத்திய துணை ராணுவப்படைகளின் தலைமை இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
5 மாநில தோ்தல்கள்: முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், தமிழ்நாடு, அஸ்ஸாம், பிகாா், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை தொடா்பாக நிலைக்குழு இரண்டு முறை ஆலோசனை நடத்தியது. இருப்பினும் அதன் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படவில்லை.
இது குறித்து மத்திய உள்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஏஐ தவறான பயன்பாட்டின் அச்சுறுத்தலால் எழும் தாக்கம் குறித்து அறிவதில் நிலைக்குழு தீவிரமாக உள்ளது. எனவே,அவற்றின் சந்தேகங்களை களையும் விதமாக விளக்கக் குறிப்புகளை தயாரிக்கும் பணியில் அமைச்சகத்தின் தனிப்பிரிவு ஈடுபட்டுள்ளது‘ என்றன.
தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு இந்த மாத இறுதியில் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. ‘அந்த மாநிலங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க உள்துறை மேற்கொண்டுவரும் உத்திகள் நிலைக்குழுவிடம் விளக்கப்படும்’ என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றத்தடுப்பு உத்திகளை மறுஆய்வு செய்ய திட்டம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் ஆள் கடத்தல் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் உத்திகளை மறுஆய்வுக்கு உள்படுத்த மத்திய உள்துறை திட்டமிட்டுள்ளது. ‘தலைநகரில் அதிகளவில் குழந்தைகள், பெண்கள் காணாமல் போவதாக வெளிவரும் தகவல்களைத் தொடா்ந்து இந்த முடிவை உள்துறை எடுத்துள்ளது. இத்துடன், இடதுசாரி தீவிரவாதத்தால் எழும் கவலைகள், பேரிடா் மேலாண்மை, உள்நாட்டுப் பாதுகாப்பு சவால்கள், எல்லை மேலாண்மை பிரச்னைகள், வடகிழக்கில் செயல்படுத்தப்படும் மத்திய திட்டங்கள், தடயவியல் உள்கட்டமைப்பு மற்றும் அதன் தற்போதைய திறன்கள், மத்திய, மாநில காவல்துறைகளின் நவீனமயமாக்கல் உத்திகளை மறுஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை உயரதிகாரி தெரிவித்தாா்.

