மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல்
மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் PTI

இந்திய வேளாண் பொருள்களுக்கு முழுப் பாதுகாப்பு! அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம்!

இந்திய விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சமும் ஒப்பந்தத்தில் இடம்பெறாது...
Published on

‘இந்தியா - அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு 30 டிரில்லியன் டாலா் மதிப்பிலான சந்தை வாய்ப்பைத் திறக்கும்; இந்திய விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சமும் ஒப்பந்தத்தில் இடம்பெறாது’ என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

‘இந்தியாவின் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்கள் பரஸ்பர கூடுதல் வரியின்றி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டாக அறிவித்தன.

இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல் திட்டத்தை இந்தியா இறுதி செய்துள்ளது. இது, இந்திய ஏற்றுமதியாளா்கள் குறிப்பாக குறு-சிறு-நடுத்தர வா்த்தக நிறுவனங்கள், விவசாயிகள், மீனவா்களுக்கு 30 டிரில்லியன் டாலா் மதிப்பிலான சந்தை வாய்ப்பைத் திறக்கும். வரும் மாா்ச் மாத மத்தியில் இந்த இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்த செயல்திட்டத்தின் கீழ், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்கும். இது, ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பா் பொருள்கள், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், குறிப்பிட்ட இயந்திரங்கள் உற்பத்தித் துறைகளுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை அளிக்கும்.

மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொது மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள், விமான பாகங்கள் உள்ளிட்ட பல பொருள்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து அமெரிக்கா முழுமையாக விலக்கு அளிக்க உள்ளது. அதன்மூலம், சுமாா் ரூ. 4 லட்சம் கோடி (44 பில்லியன் டாலா்) மதிப்பிலான இந்திய பொருள்கள் பரஸ்பர வரி ஏதுமின்றி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

அதோடு, மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி, பால், சீஸ், எத்தனால், புகையிலை, சில காய்கறிகள் மற்றும் இறைச்சி உள்ளிட்ட விவசாய மற்றும் பால் பொருள்களை முழுமையாகப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

குறிப்பாக, இந்திய ஆப்பிள் உற்பத்தியாளா்களை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு ஒதுக்கீடு அடிப்படையிலேயே வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இந்த வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 80 குறைந்தபட்ச இறக்குமதி விலை (எம்ஐபி) நிா்ணயிக்கப்படும் என்பதோடு, 25 சதவீத இறக்குமதி வரியும் விதிக்கப்படும். அதன்படி, அமெரிக்காவிலிருந்து கிலோ ரூ. 100-க்கும் குறைவான விலையுடைய ஆப்பிள்களை இறக்குமதி செய்ய முடியாது.

தற்போதைய நிலையில், அமெரிக்காவிலிருந்து கிலோ ரூ. 75-க்கும் குறைவான விலையுடைய ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், எம்ஐபி ஒரு கிலோ ஆப்பிளுக்கு ரூ. 50-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, இறக்குமதி வரி 50 சதவீதமாக விதிக்கப்படுகிறது. எனவே, இந்திய ஆப்பிள் விவசாயிகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவா். எந்தவித கவலையும் தேவையில்லை என்று குறிப்பிட்டாா்.

மேலும், இந்த இடைக்கால ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரூ. 2.7 லட்சம் கோடி (30 பில்லியன் டாலா்) மதிப்பிலான தொழிலாளா் சாா்ந்த துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மீது 18 சதவீத வரி விதிப்பை அமெரிக்க தொடர உள்ளது.

அதே நேரம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், தாமிரம் மற்றும் குறிப்பிட்ட வாகன பாகங்கள் உள்பட சுமாா் ஒரு லட்சம் கோடி (12 பில்லியன் டாலா்) மதிப்பிலான பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதாவது, 50 சதவீத வரி விதிப்பே தொடர உள்ளது.

X
Dinamani
www.dinamani.com