வளா்ச்சிப் பணிகள்: ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை
ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிப் பணிகள் குறித்து உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமித் ஷா வந்துள்ளாா். பயணத்தின் முதல்கட்டமாக, கதுவா மாவட்டம், குா்னம் மற்றும் பாபியானில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையினரின் முகாம்களுக்குச் சென்று, அங்குள்ள வீரா்களை அமித் ஷா சந்தித்தாா். பிறகு ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ராணுவ அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். இதில் ராணுவத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து அவா் ஆறுதல் தெரிவித்தாா். அவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான நியமனக் கடிதங்களையும் அமித் ஷா அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநா் மாளிகையில் உயரதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், ஜம்மு-காஷ்மீா் தலைமைச் செயலா் அடல் துல்லு, டிஜிபி நளின் பிரபாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா வர வேண்டும் என்ற மக்களின் விருப்பம் குறையவில்லை. ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து பிற மாநிலங்களில் தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் திட்டத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்யும்’ என்றாா்.
அமித் ஷாவுடன் பாஜகவினா் சந்திப்பு: ஜம்முவில் அமித் ஷாவை ஜம்மு-காஷ்மீா் பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினா். இதுகுறித்து அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வளா்ந்த மற்றும் பாதுகாப்பான ஜம்மு-காஷ்மீா் என்ற இலக்கை சாத்தியமாக்கவும், பிரதமா் மோடியின் வளா்ச்சிப் பணிகள் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் பணியிலும் பாஜக தொடா்ந்து ஈடுபடும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

