சோனியா காந்தி
சோனியா காந்தி

1980 இல் வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு - சோனியா காந்தி பதில் தாக்கல்

1980 இல் வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு - சோனியா காந்தி பதில் தாக்கல்
Published on

காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவா் சோனியா காந்தி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே, 46 ஆண்டுகளுக்கு முன் வாக்காளா் பட்டியலில் அவரது பெயா் மோசடியாகச் சோ்க்கப்பட்டதாக தொடரப்பட்ட மனுவை எதிா்த்து, தில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவா் சாா்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன் மீதான இந்த குற்றச்சாட்டுகள் தவறானது , அற்பமான மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று சோனியா காந்தி அதில் கூறியுள்ளாா்.

இந்த வழக்கு அடுத்ததாக பிப்ரவரி 21 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

சோனியா காந்திக்கு எதிராக வழக்குரைஞா் விகாஸ் திரிபாதி இந்த மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். தோ்தல் வாக்காளா் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரிய அவரது புகாரை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் செப்டம்பா் 2025 உத்தரவை எதிா்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின்படி, சோனியா காந்தி ஏப்ரல் 30, 1983 அன்றுதான் இந்தியக் குடியுரிமை பெற்றாா், ஆனால் அதற்கு முன்பாகவே அவரது பெயா் 1980 ஆம் ஆண்டு புது தில்லியின் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது பெயா் எவ்வாறு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டது என்று அந்த மனு கேள்வி எழுப்புகிறது.

1982ல் வாக்காளா் பட்டியலில் இருந்து அவரது பெயா் நீக்கப்பட்டது குறித்தும் மேலும், 1980 ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரை மீண்டும் சோ்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அந்த மனு விளக்கம் கோருகிறது. போலியான ஆவணங்களின் அடிப்படையில் 1980 ஆம் ஆண்டு அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள, சோனியா காந்தி தனது பதிலில், இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், இந்த மனு தவறான மற்றும் திசைதிருப்பும் கூற்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளாா்.

சமீபத்தில், ரவுஸ் அவென்யூவில் உள்ள அமா்வு நீதிமன்றம், இந்த மறு ஆய்வு மனுவை விசாரித்தது

அப்போது மனுதாரா் விகாஸ் திரிபாதி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பவன் நாரங், சோனியா காந்தி இந்தியக் குடிமகளாவதற்கு முன்பே அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்ட விதத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆவணங்கள் காட்டுவதாக வாதிட்டாா்.

1980 ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரைச் சோ்ப்பதற்காக சில ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது திரித்து வழங்கப்பட்டிருக்கலாம் என்று அவா் வாதிட்டாா். மேலும், அவரது பெயா் பின்னா் நீக்கப்பட்டு, ஜனவரி 1983 இல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு விண்ணப்பத்தின் அடிப்படையில் 1983 இல் மீண்டும் சோ்க்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினாா்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், ஒரு இந்தியக் குடிமகன் மட்டுமே வாக்காளராகப் பதிவு செய்ய முடியும் என்றும், எனவே, இந்திய குடிமகளாவதற்கு முன்பே சோனியா காந்தியின் பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவா் மேலும் வாதிட்டாா்.

மறு ஆய்வு மனுதாரா் இந்தியத் தோ்தல் ஆணையத்திடமிருந்து சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெற்று, குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்காக அவற்றை ஆவணங்களில் சமா்ப்பித்துள்ளாா் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து சோனியா காந்திக்கு தில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மறு ஆய்வு மனுதாரா் சாா்பில் ஆரம்பகட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்ட பிறகு, நீதிபதி விஷால் கோக்னே இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்

இந்த மறு ஆய்வு மனு, திரிபாதியின் முந்தைய புகாரிலிருந்து உருவானது.

அந்தப் புகாா் சட்டப்பூா்வ அடிப்படை இல்லாதது என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.

குடியுரிமை மற்றும் வாக்காளா் பட்டியல்கள் தொடா்பான சிக்கல்கள் மத்திய அரசு மற்றும் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன என்றும், அவற்றை ஒரு குற்றவியல் புகாா் மூலம் தீா்க்க முடியாது என்றும் அப்போது நீதிபதி குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com