சிவராஜ் சிங் சௌஹான்
சிவராஜ் சிங் சௌஹான்

அமெரிக்க ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு முழுப் பாதுகாப்பு: மத்திய வேளாண் அமைச்சா் விளக்கம்

அமெரிக்கவுடனான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளுக்கு முழுப் பாதுகாப்பு உள்ளது.
Published on

இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கூறும் எந்தக் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை; இந்திய விவசாயிகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் முழுப் பாதுகாப்பு உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் விளக்கமளித்தாா்.

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சௌஹான் கூறியதாவது: இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் உறுதியான பேச்சுவாா்த்தைகள் மூலமும், இருதரப்புக்கும் நன்மை அளிக்கும் என்ற அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் எவ்வித பேரமும் நடைபெறவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தேசத்தின் நலன் கருதி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருள்களுக்கு ஒப்பந்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த ராஜீய செயல்பாடுகள், பொருளாதார வளா்ச்சி, கௌரவத்தை நிலைநாட்டுவது ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் உதாரணமாக அமைந்துள்ளது.

காங்கிரஸ் செய்தது என்ன?: காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துள்ளது. ஆனால், இந்திய விவசாயப் பொருள்களை சா்வதேச சந்தையில் உறுதியாக நிலைநிறுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முயற்சித்தது இல்லை. நாடு சுதந்திரமடைந்தபோது இந்தியா சா்வதேச அளவில் 6-ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. அதை 11-ஆவது இடத்துக்குத் தள்ளியதுதான் காங்கிரஸ் செய்த சாதனை. ஆனால், பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயா்த்தியதுடன், அந்த வளா்ச்சியை தொடா்ந்து முன்னெடுத்தும் வருகிறது.

முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் குறைக்கப்பட்ட 18 சதவீத வரி விதிப்பில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. தேசத்தை தலைகுனிய விட மாட்டோம் என்பதிலும், விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதிலும் பிரதமா் மோடி மிக உறுதியாக உள்ளாா்.

வரிச் சலுகை கிடையாது: மரபணு மாற்றப்பட்ட பயிா்களை இந்தியாவில் அனுமதிக்க மாட்டோம் என்பதில் இந்தியா மிக உறுதியாக உள்ளது. இது மிகப்பெரிய முடிவாகும். இதன்மூலம் இந்திய விவசாயத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படுகிறது. நமது மண்ணும், விதைகளும் பாதுகாப்பாக உள்ளன.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் இறைச்சி, பால் பொருள்கள், சோயாபீன்ஸ், அரிசி, கோதுமை, சா்க்கரை, சொ்ரீ, ஸ்ட்ராபெரி, மக்காச்சோளம், பச்சைப் பட்டாணி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், எத்தனால், புகையிலை ஆகியவற்றுக்கு வரிச் சலுகை அளிக்கப்படவில்லை.

அனுமதி இல்லாத பொருள்கள்: உருளைக்கிழங்கு, வெங்காயம், பீன்ஸ், பட்டாணி, வெள்ளரி, காளான், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்டவை, நெய், வெண்ணெய், பனீா், தயிா், மோா், பால் பவுடா் உள்ளிட்ட பால் சாா்ந்த அனைத்து வகைப் பொருள்கள், மிளகு, கிராம்பு, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயம், இஞ்சி, மஞ்சள், வெந்தயம், கடுகு, ஓமம் உள்ளிட்ட எந்தப் பொருளும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் நுழைய அனுமதி இல்லை என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை சனிக்கிழமை வெளியானது. இதை முன்வைத்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்தது. முக்கியமாக, இந்திய விவசாயிகளின் நலனை அடகு வைத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் அந்நாட்டு வேளாண் பொருள்கள் மீதான வரியை மத்திய அரசு குறைக்கவுள்ளது. இதனால் அமெரிக்காவின் இறக்குமதி மும்மடங்கு அதிகரிக்கும். அமெரிக்காவிடம் மோடி அரசு சரணடைந்துவிட்டது என்று குற்றஞ்சாட்டியது.

X
Dinamani
www.dinamani.com