

வரும் 2027ஆம் ஆண்டுக்குள் 99 சதவீத வேலைகள் பறிபோகும் என்று கணினி விஞ்ஞானியும் பல்கலை பேராசிரியருமான டாக்டர் யம்போல்ஸ்கி எச்சரித்துள்ளார.
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரான யம்போல்ஸ்கி, அடுத்த ஐந்தாண்டு காலத்துக்குள் பெரும்பாலான மனித வேலைகள் பறிபோகும் ஆபத்து உள்ளது, ஆனால், இதற்கு முன்பு இருந்ததைப் போல் அல்லாமல் இந்த நிலை மீண்டும் சரியாகாத வகையில் மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை, செய்யறிவால் ஏற்படும் அபாயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பவர் இவர்.
இவர் யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மனிதர்களைவிட திறமையாக வேலை செய்யும் செய்யறிவுகள் காரணமாக வரும் 2027ஆம் ஆண்டுக்குள் பல வேலைகள் பறிபோகும். அடுத்த ஐந்தாண்டுகளில் வேலை வாய்ப்பு என்பது இதுவரை காணாத ஒரு அபாயத்தை எட்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து தொழிலாளர்கள் செய்யும் வேலைகளும் தானியங்கி மூலமாக மாற்றப்படும். இதுவரை உலகம் காணாத ஒரு வேலைவாய்ப்பற்ற நிலையை நாம் விரைவில் சந்திப்போம்.
நாம் தற்போது பேசுவது 10 சதவீத வேலை வாய்ப்புப் பற்றியல்ல, 99 சதவீத வேலைவாய்ப்பு பற்றி என்றும் மிரட்டுகிறார்.
இதற்கு முன்பு ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சி போல அல்லாமல் இயந்திரங்களுடன் மனிதர்களும் பணியாற்றும் வாய்ப்பு ஏற்படாது. தானியங்கியாக மாற்றப்படாத வேலை என்று ஒன்று இருக்காது. இதுவரை நாம் கண்ட எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் மனிதர்கள் செய்ய ஏதேனும் ஒன்று இருக்கும்.
இதில், ஊடகம் மற்றும் புத்தாக்கப் பணிகளும் விடுபடப்போவதில்லை. செய்திகளை உருவாக்குவது, பாட்காஸ்ட் செய்வது போன்றவற்றையும் மனிதர்களை விட இயந்திரங்கள் சிறப்பாக செய்யும் நிலை உருவாகும். ஒரு மனிதர்தான் செய்ய வேண்டும், செய்ய முடியும் என்று ஒரு வேலை இருக்காது. உங்களுக்காக ஒரு வேலையை ஒரு மனிதர்தான் செய்ய முடியும் என்ற ஒன்றும் இருக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், செய்யறிவால் செய்ய முடியாத என்ற வேலைகள் ஏதேனும் இருக்குமா என்பது பற்றியும் கூறுகிறார், அதில், மனிதர்களால் செய்யப்படும் கைவினைப் பொருள்கள். பலரும் கைவினைப் பொருள்களை இன்னமும் விரும்புகிறார்கள். எனவே, மனிதர்களின் கைகளால் செய்யப்படும் சிறு பயன்பாட்டு கைவினைப் பொருள் கலைஞர்களின் வேலை செய்யறிவால் பறிபோகாமல் இருக்கலாம். ஆனால் அதன் மூலம் பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது.
ஆலோசனை வழங்குவது போன்ற வேலைகளை செய்பவர்களின் வேலை பறிபோகாது. ஏனென்றால் சில மனித உணர்வுகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கும். மனிதர்களின் சிக்கல்களைப் புரிந்தகொணடு பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களின் பணி பறிபோகாது என்கிறார்.
இது மட்டுமல்லாமல், மேற்பார்வை மற்றும் வழிமுறைப்படுத்தும் பணிகளை செய்யறிவால் தற்போது செய்ய முடியாது. எனினும் இது நீண்ட காலத்துக்கு தாக்குபிடிக்காது.
செய்யறிவை நன்கு புரிந்துகொண்டவர்கள், அதனை நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்காக வேலை செய்ய வைக்கும் பணிகளை செய்வார்கள்.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் வேகம், மக்கள் தயாராகும் சமூக மாற்றத்தைவிட மிக வேகமாக நடப்பதாகவும் அவர் கூறுகிறார்.
நம்மால் பார்க்க முடியாத, புரிந்துகொள்ளவோ, கணிக்கவோ இயலாத புலனறிவாலும் சிந்திக்கவும் முடியாததாக இருக்கிறது, உலகில் என்ன நடக்கப்போகிறது என்பது. நாளுக்கு நாள் ஒட்டுமொத்த திறனையும் ஒப்பிட்டால் நான் முட்டாளாகிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் தோறுகிறது. நான் நாள்தோறும் படித்துக்கொண்டிருந்தாலும் செய்யறிவுடன் ஒப்பிட்டால் தொடர்ந்து முட்டாளாகத்தான் ஆகிறோம் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.