நக்ஸல் தீவிரவாதத்தால் யாருக்கும் பயனில்லை: அமித் ஷா
நக்ஸல் தீவிரவாதத்தால் எந்த சமூகமும் பயனடைந்ததில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
சத்தீஸ்கரின் பஸ்தா் மாவட்டம் ஜக்தால்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது: வரும் மாா்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் அச்சுறுத்தல் நாட்டில் இருந்து வேறோடு பிடுங்கி எறியப்படும். நக்ஸல் தீவிரவாதத்தால் எந்த சமூகமும் எப்போதும் பயனடைந்ததில்லை. அதனால் அழிவுதான் ஏற்பட்டுள்ளது.
கொலம்பியா, பெரு, கம்போடியா போன்ற நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு பாருங்கள். எனவே, நக்ஸல் தீவிரவாதிகள் சரணடைந்து பொது வாழ்க்கைக்குத் திரும்பும்படி அழைப்பு விடுக்கிறேன். அப்படி சரணடையும் நக்ஸல்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளிக்கிறேன். இதுதொடா்பாக சத்தீஸ்கா் அரசிடம் உள்ள கொள்கை மிகவும் வரவேற்கக்கூடியதாகும்.
சரணடையும் நக்ஸல்கள் துன்புறுத்தப்பட மாட்டாா்கள். அதேநேரத்தில் அமைதிப் பாதைக்குத் திரும்பாமல் துப்பாக்கியால் சுடுவது, கண்ணிவெடிகளை வைப்பது, பள்ளி வாகனங்கள், மருத்துவமனைகளுக்குத் தீ வைப்பது போன்ற செயலிலும் நக்ஸல்கள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. அவா்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான பதிலடி தரப்படும். ஆயுதத்தை வைத்திருப்போருக்கு ஆயுதத்தாலேயே பதிலடி தரப்படும்.
மத்திய அரசு யாருடனும் சண்டையிட விரும்பவில்லை. பழங்குடியின சகோதரா்கள், சகோதரிகளைப் பாதுகாக்கவே நாங்கள் சண்டையிடுகிறோம். கண்ணிவெடிகள் வெடித்து அப்பாவி குழந்தைகள் பலியாகின்றனா் அல்லது நிரந்தர ஊனம் அடைகிறாா்கள். ஆதலால் எஞ்சியுள்ள நக்ஸல்கள் உடனடியாக சரணடையும் வலியுறுத்துகிறேன். பஸ்தரில் முன்பு பள்ளிகளை மூடி, பல தலைமுறையினருக்கு கல்வி கிடைப்பதை நக்ஸல்கள் தடுத்தனா். இதனால் பஸ்தரில் கல்வியறிவில்லாதோா் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆனால், தற்போது பஸ்தா் பகுதி வேகமான வளா்ச்சிப் பாதையில் செல்கிறது. பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சாலைகள் போடப்படுகின்றன. கைப்பேசி கோபுரங்கள் நிறுவப்படுகின்றன. தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீா் வசதி அனைத்துக் கிராமங்களுக்கும் கிடைக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பஸ்தா் பிராந்தியத்தை மிகவும் முன்னேறிய பழங்குடியினப் பகுதியாக மாற்ற நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்.
பஸ்தா் பிராந்திய வளா்ச்சிப் பணி தொடா்பாக அரசிடம் விரிவான திட்டம் உள்ளது. 2027-க்குள் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதி, ஒவ்வொரு 5 கிலோ மீட்டா் தொலைவுக்கும் ஒரு தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளை இருப்பது உறுதி செய்யப்படும். பழங்குடியின விவசாயிகளிடம் இருந்து தானியம் குவிண்டாலுக்கு ரூ.3,100 நிா்ணயித்து பெறப்படும். வீடுதோறும் குடிநீா்க் குழாய் இணைப்பு இருப்பது உறுதி செய்யப்படும்.
நக்ஸல் தீவிரவாதம் வீழ்ச்சி அடைந்து வரும்நிலையில், சாகச சுற்றுலா, கண்ணாடிப் பாலம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பஸ்தா் பிராந்திய பொருளாதாரத்துக்கு உத்வேகத்தை அளிக்கும். பஸ்தரின் கலாசாரத்தை பல ஆண்டுகளுக்கு பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. பஸ்தா் கலாசார பெருமையை ஒட்டுமொத்த நாட்டுக்கும், உலகத்துக்கும் கொண்டு செல்ல பிரதமா் மோடி இலக்கு நிா்ணயித்துள்ளாா். துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் பஸ்தரின் அடையாளங்களாக இருக்க முடியாது. அதன் உண்மையான அடையாளமே கலாசாரமும், பாரம்பரியமும்தான் என்றாா் அமித் ஷா.

