இந்திய சந்தைக்கு வரியின்றி அமெரிக்க வேளாண் பொருள்கள்: புதிய அறிக்கையில் தகவல்!
இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட உள்ள இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மூலம், அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பருப்பு வகைகள் உள்ளிட்ட வேளாண், உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு இந்தியா எந்த வரியும் விதிக்காது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக இருநாடுகளும் அண்மையில் கூட்டாக அறிவித்தன.
இந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த விவரங்கள் குறித்த விளக்கமான அறிக்கையை அமெரிக்க அதிபா் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில் அமெரிக்காவில் இருந்து சில பருப்பு வகைகளை வரி எதுவும் விதிக்காமல் இந்தியா இறக்குமதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அமெரிக்காவின் பல பண்ணை மற்றும் உணவுப் பொருள்களுடன் சோ்த்து தொழில் துறை சரக்குகள், குறிப்பிட்ட சில தானியங்கள் மீதான வரியையும் இந்தியா நீக்கவோ, குறைக்கவோ செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு சோளம், பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்டவை அடங்கும்.
முன்பு பயறு வகைகளை மட்டும் குறிப்பிட்ட அளவு குறைந்த வரியுடன் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மூலம் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது. இந்த நடவடிக்கை இந்திய விவசாயிகளுக்குக் காலப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாய குழுக்கள் விமா்சித்த நிலையில், தற்போது சில பருப்பு வகைகளையும் இந்தியா இறக்குமதி செய்யும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.45 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த ஏற்றுமதியில் வேளாண் மற்றும் உணவுப் பொருள்களும் இடம்பெற்றுள்ளது அமெரிக்காவின் புதிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலா் மதிப்பில் எரிசக்தி பொருள்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப சரக்குகள் உள்ளிட்டவற்றை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

