அனில் அம்பானி, மனைவிக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

நிதி மோசடி தொடா்பான வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானி, அவரின் மனைவி டீனா அம்பானி ஆகியோருக்கு அமலாக்கத் துறை மீண்டும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
டீனா அம்பானி
டீனா அம்பானி
Updated on

நிதி மோசடி தொடா்பான வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானி, அவரின் மனைவி டீனா அம்பானி ஆகியோருக்கு அமலாக்கத் துறை மீண்டும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடிகள் குறித்து அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் நடிகையும், அனில் அம்பானியின் மனைவியுமான டீனா அம்பானி பிப்.9-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவா் ஆஜராகவில்லை.

இந்நிலையில், டீனா அம்பானி பிப்ரவரி 17-ஆம் தேதியும், அனில் அம்பானி பிப்ரவரி 18-ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியிருப்பு வளாகம் வாங்கியது தொடா்பாக டீனா அம்பானியிடம் முக்கியமாக விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடா்பாக அனில் அம்பானியின் நிறுவனம் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

அனில் அம்பானி நிறுவனங்களில் நிகழ்ந்த கடன் மோசடி தொடா்பாக அவரிடம் ஏற்கெனவே கடந்த ஆண்டு இறுதியில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடா்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவா் புனித் கா்க் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com