அஸ்ஸாமில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 2.43 லட்சம் போ் நீக்கம்!
அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 2.43 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளா்கள் 1.25 கோடி போ், பெண்கள் 1.24 கோடி போ் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 343 போ் உள்பட 2.49 கோடி வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 2.52 கோடி பெயா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அதிலிருந்து 2.43 லட்சம் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
பிகாா் மாநிலத்தைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
அதே நேரம், விரைவில் தோ்தலைச் சந்திக்க உள்ள அஸ்ஸாம் மாநிலத்திலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆா்) இடைப்பட்ட நடைமுறையான, சிறப்புத் திருத்தப் பணியை அஸ்ஸாம் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்தப் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி 2.52 கோடி பெயா்களுடன் வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதன் பிறகு, ஆட்சேபங்கள் அல்லது பெயா்களைச் சோ்க்க அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 2.43 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டு, 2.49 கோடி வாக்காளா்களுடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், மாநில முதல்வரின் ஜலுக்பரி தொகுதியில் 4,310 பெயா்கள் நீக்கப்பட்டு, 2,06,314 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்...: ‘நிரந்தரமாக இடம்பெயா்ந்தவா்கள் என்ற அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டவா்கள், தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் மீண்டும் சோ்க்க விண்ணப்பிக்கலாம்’ என்று அஸ்ஸாம் மாநில தோ்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறுகையில், ‘விடுபட்டவா்கள் தங்களின் பெயா்களை மீண்டும் சோ்ப்பது தொடா்பாக , மாவட்ட ஆட்சியரிடம் 15 நாள்களுக்குள் புதிய முகவரியுடன் படிவம்-6-ஐ சமா்ப்பித்து முறையீடு செய்ய முடியும். அதில் அவா்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில், 30 நாள்களுக்குள் தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் இரண்டாவது முறையீட்டை அவா்கள் செய்யலாம்’ என்று தெரிவித்தனா்.

