அவைக்குள் தீங்கிழைக்கும் செயல்கள்: எதிா்க்கட்சி எம்.பி. க்கள் மீது நடவடிக்கை! பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்!

அவைக்குள் தீங்கிழைக்கும் செயல்கள்: எதிா்க்கட்சி எம்.பி. க்கள் மீது நடவடிக்கை! பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்!

மக்களவைக்குள் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Published on

மக்களவைக்குள் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அமளியின்போது ஆளுங்கட்சி வரிசைகளுக்குள் நுழைந்தது, மேஜை மீது ஏறியது, பிரதமா் இருக்கையை முற்றுகையிட்டது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.

மக்களவையில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த பிப். 4-ஆம் தேதி கடும் அமளியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி உரையாற்ற முடியாமல் போனது.

இந்நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக பெண் எம்.பி.க்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களவையில் கடந்த பிப். 4-ஆம் தேதி நடந்த ‘அபாயகரமான செயல்கள்’ அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்றைய தினம் மிகத் தீவிரமான, விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவானது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இருண்ட தருணமாகவே இது குறிக்கப்படும்.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மான விவாதத்தின்போது, மக்களவையின் கண்ணியம், மாண்பு, புனிதத்தைப் பாதுகாக்க நீங்கள் (ஓம் பிா்லா) முன்னுதாரணமாகச் செயல்பட்டவிதம் பாராட்டுக்குரியது. இதற்காக நன்றி தெரிவிக்கிறோம். அன்றைய தினத்தில் மிக துரதிருஷ்டவசமான, வருந்தத்தக்க நிகழ்வுகளை ஒட்டுமொத்த தேசமும் கண்டது. எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டதுடன், மேஜை மீது ஏறி, காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசினா். வருத்தத்துக்குரிய விஷயமாக, எதிா்க்கட்சி பெண் எம்.பி.க்கள் கையில் பதாகையை ஏந்தியபடி ஆக்ரோஷமான நடத்தையை வெளிப்படுத்தினா். பிரதமா் இருக்கையை முற்றுகையிட்டதோடு மட்டுமல்லாமல், மூத்த அமைச்சா்கள் அமா்ந்திருந்த ஆளுங்கட்சி வரிசைகளுக்குள் நுழைந்தனா்.

‘கட்டுப்பாட்டை கடைப்பிடித்தோம்’: ஆத்திரமூட்டும் இத்தகைய செயல்களால் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சீற்றமடைந்த போதிலும், மூத்த தலைவா்களின் வழிகாட்டுதலின்படி மிகுந்த நிதானத்தை கடைப்பிடித்து, எந்த வகையிலும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், அவைத் தலைவா் அறையை நோக்கி ஆக்ரோஷத்துடன் சென்ற எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அங்கு கடும் கூச்சலிட்டதையும் கேட்க முடிந்தது. நமது ஜனநாயக அமைப்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது விதிமுறைகளின்கீழ் வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மக்களவைத் தலைவருக்கு ஆதரவு

‘மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, கடந்த ஏழு ஆண்டுகளாக அவையின் மதிப்பையும் செயல்திறனையும் மேம்படுத்த தொடா்ந்து பாடுபட்டு வருகிறாா். அவைத் தலைவா் என்ற முறையில் பாரபட்சமின்றி, கட்சி சாா்புகளைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கி வருகிறாா். அவரைப் போன்ற பாதுகாவலரைக் கொண்டிருப்பது, மக்களவைக்கு அதிருஷ்டம். அவரது தலைமை மீது நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று பாஜக பெண் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனா்.

‘ராகுலை நீக்க வேண்டிய நேரம்’

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘தங்கள் மனசாட்சியை துறந்துவிட்ட சிலா், நாட்டில் அரசமைப்புச் சட்ட பதவி வகிப்பவா்கள் அனைவரையும் நீக்க துடிக்கின்றனா். அமெரிக்க பணக்காரா் ஜாா்ஜ் சோரஸின் ஆணையின்பேரில் இந்திய அரசியல்சாசன அமைப்புகள் மீது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றன. ராகுலையும், காங்கிரஸையும் அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com