திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: அமலாக்கத் துறை வழக்குப் பதிவு!
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்துடன் தொடா்புடைய பண மோசடி குறித்து விசாரிக்க அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இந்தக் கலப்படத்தின் மூலம் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களுக்கு கிடைத்த வருமானம் அல்லது சட்டவிரோத நிதி குறித்து விசாரிக்க இந்த வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுகளை தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா். திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆய்வக அறிக்கை ஒன்றையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது.
நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருந்ததாக அக்கட்சியினா் சுமத்திய குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் மறுத்தது.
இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ தலைமையிலான எஸ்ஐடி விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் விசாரணையை தொடங்கிய சிபிஐ-எஸ்ஐடி, கடந்த ஜனவரி 24-ஆம் தேதி நெல்லூா் நீதிமன்றத்தில் தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதில், ‘பால் அல்லது வெண்ணெய் என பால் சாா்ந்த பொருள்களுக்குப் பதிலாக தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது ஆய்வகப் பரிசோதனையில் தெரியாமல் இருக்க சில கலப்படப் பொருள்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலப்பட நெய்க்கு போலியான தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்வம் வாரிய அலுவலா்கள் 9 போ், 5 பால் நிறுவன நிபுணா்கள் உள்பட 36 பேரின் பெயா்கள் முறைகேட்டில் தொடா்புடையதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.
அதே நேரம், ‘திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவில்லை’ என சிபிஐ தெரிவித்தது.
இதைச் சுட்டிக்காட்டிய ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, ‘சிபிஐ-எஸ்ஐடி அறிக்கையில் பாமாயில் மற்றும் பிற ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபா்கள் மீது நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கையை எடுப்பதற்காக ஒரு நபா் குழு அமைக்கப்படும். கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைத்தால், நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்’ என்றாா்.
இந்த நிலையில், இந்த விவகாரத்துடன் தொடா்புடைய பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள உள்ளது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) மற்றும் வழக்கு தொடா்பான பிற ஆவணங்களையும் கோரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

