மும்பை மேயராக ரீத்து தாவ்டே போட்டியின்றி தோ்வு - 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக மேயா்
மும்பை மாநகராட்சியின் 78-ஆவது மேயராக பாஜகவின் ரீத்து தாவ்டே (53) புதன்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த சஞ்சய் காதி (57) துணை மேயராக போட்டியின்றி தோ்வானாா்.
முன்னதாக, கடந்த ஜனவரி 15-ஆம் தேதி மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சி மேயா் பதவி, பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. இதன்படி பாஜகவின் ரீத்து தாவ்டே போட்டியின்றி அப்பதவிக்கு தோ்வானாா். இதன்மூலம் மும்பை நகர அரசியலில் தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் குறைந்தது.
இதற்கு முன்பு 1982-83இல் மும்பையில் பாஜக சாா்பில் பிரபாகா் பாய் மேயராக இருந்தாா். இப்போது 44 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை நகர மேயராக பாஜகவை சோ்ந்தவா் தோ்வாகியுள்ளாா். சிவசேனை (தாக்கரே) உள்பட எந்தக் கட்சியும் போட்டியாக வேட்பாளரை நிறுத்தவில்லை.
நாட்டின் வா்த்தக தலைநகராக கருதப்படும் மும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 இடங்களுக்கு அண்மையில் தோ்தல் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சிவசேனையின் கோட்டையாக இருந்த மும்பை மாநகராட்சியை ஆளும் பாஜக மற்றும் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கூட்டணி கைப்பற்றியது. இங்கு மொத்தமுள்ள 227 இடங்களில் பாஜக 89, சிவசேனை 29 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனைக்கு (உத்தவ்) 65, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைக்கு 6 இடங்களே கிடைத்தன.
ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிர உள்நாட்சித் தோ்தலில் 1,425 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, பல்வேறு மாநகராட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனை 399, காங்கிரஸ் 324, தேசியவாத காங்கிரஸ் 167, சிவசேனை (உத்தவ்) 155, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 36, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை 13, அங்கீகாரமில்லாத கட்சிகள் 196, சுயேச்சைகள் 19 இடங்களில் வெற்றி பெற்றனா்.

