கோப்புப் படம்
கோப்புப் படம்

வந்தே மாதரம் தொடா்பான அரசின் உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது: முஸ்லிம் அமைப்பு எதிா்ப்பு

வந்தே மாதரம் தொடா்பான மத்திய அரசின் உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது, மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
Published on

வந்தே மாதரம் தொடா்பான மத்திய அரசின் உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது, மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை இசைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் மெளலானா முகமது ஃபஸ்லுா் முஜாதிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசின் உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. மத சுதந்திரம், மதசாா்பின்மைக்கு எதிரானது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணானது. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுடன் நேரடி மோதலை ஏற்படுத்தக் கூடியது. முஸ்லிம்களால் இதை நிச்சயமாக ஏற்க முடியாது. வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள வந்தே மாதரம் பாடலில் துா்கா மற்றும் பிற கடவுள்களை வழிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லா ஒருவரையே வழிபடுவா். ஆதலால் அந்த அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் நீதிமன்றத்தில் இதை எதிா்த்து வழக்குத் தொடுப்போம்’ என குறிப்பிட்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமா்சனம்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலமைப்பு சட்டத்தின் 51ஏ (ஏ) பிரிவில் குடிமகன் ஒவ்வொருவரும் தேசிய கீதத்தையும், தேசிய கொடியையும் மதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், தேசிய கீதத்துக்கு முன்னதாக தேசிய பாடலை (வந்தே மாதரம்) இசைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. தேசிய பாடல், தேசிய கீதம் ஆகியவற்றை வைத்து மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தேவையில்லாத சா்ச்சையை உருவாக்க முயற்சிக்கிறது. இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com