

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை பட்ஜெட் தொடர்பாக பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் மாற்றம் தவிர வேறு எந்த கேள்வியையும் கேட்கமாட்டீர்களா? இந்த விவகாரத்தை தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என்கிறீர்கள். இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்காதீர்கள்.
முதல்வர் மாற்றம் தொடர்பான விவகாரத்தை கட்சி மேலிடம் அறிந்துள்ளது. இதுதொடர்பாக கட்சி மேலிடம் முடிவுசெய்யும். அதற்கு நான் கட்டுப்படுவேன். இதையே எத்தனைமுறை கூறுவது? நானோ (சித்தராமையா) டி.கே. சிவகுமாரோ கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது கட்சி மேலிடம்தான். இந்த விவகாரம் தவிர, கேட்பதற்கு வேறு எதுவும் ஊடகங்களிடம் இல்லையா? முதல்வர் மாற்றம் தொடர்பாக டி.கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் கருத்து தெரிவித்திருந்தால், அதுபற்றி அவரிடம் கேட்பதற்கு பதிலாக என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? கட்சி மேலிடத்தின் முடிவுதான் இறுதியானது.
ஒருசில எம்எல்ஏக்கள் சொந்த செலவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தால், அதை வேண்டாம் என்று சொல்ல முடியுமா, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் சொந்த பணத்தில் வெளிநாடு செல்வார்கள். ஆனால், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.
சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும். பிப். 15-ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட்டம் முடிந்தபிறகு தேதியை அறிவிப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.