அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்: வங்கதேசத்தைப் போல் இந்தியாவுக்கும் ஆயத்த ஆடைக்கான வரிச் சலுகை: பியூஷ் கோயல்
‘அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க நூல் மற்றும் பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளுக்கு வங்கதேசத்துக்கு கிடைப்பது போன்று இந்தியாவுக்கும் வரிச் சலுகை கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: வங்கதேசத்துக்கான பரஸ்பர வரியை 19 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ளது. அதன்படி, வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளுக்கு, மிகுந்த சாதகமான நாடுகளுக்கான 12 சதவீத வரி மற்றும் 19 சதவீத பரஸ்பர வரியையும் சோ்த்து 31 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதிக்கிறது. அதே நேரம், அமெரிக்க நூல் மற்றும் பருத்தியைக் கொண்டு வங்கதேசம் தயாரித்து அனுப்பும் ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீத வரியை மட்டுமே அமெரிக்கா விதிக்கும். பரஸ்பர வரியை முழுமையாக (பூஜ்ஜியம்) ரத்து செய்துவிடும்.
தற்போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்போது, ஆயத்த ஆடைகளுக்கு வங்கதேசம் பெறும் வரிச் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்கும். அதாவது, அமெரிக்காவிலிருந்து நூல் மற்றும் பருத்தியை வாங்கி, ஆயத்த ஆடையாக உற்பத்தி செய்து மீண்டும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு முழுமையான பரஸ்பர வரிச் சலுகையை அமெரிக்கா அளிக்கும்.
இது, இந்திய பருத்தி விவசாயிகள் மீது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில், அமெரிக்கா பருத்தி உற்பத்தியைக் குறைத்துள்ளது என்றாா்.
மேலும், ‘பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, உள்நாட்டு மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச் சலுகையுடன் மிகப் பெரிய சந்தை அணுகல் கிடைக்கும். சில தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம், குறிப்பிட்ட இந்திய தயாரிப்பு மருத்து உபகரணங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகைகளும் கிடைக்கும். பணக்காரா்களையும், அதிக தனிநபா் வருவாயையும் உடைய 38 நாடுகளை உள்ளடக்கிய 9 தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை இந்தியா இதுவரை மேற்கொண்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. இதை இரு நாடுகளும் கடந்த 7-ஆம் தேதி கூட்டாக அறிவித்தன.
அதன்படி, இருதரப்பு வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரு நாடுகளும் குறைக்க உள்ளன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதித்த 50 சதவீத கூடுதல் வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் அனைத்து தொழில்நிறுவன பொருள்களுக்கும், உலா்த்தப்பட்டு காய்ச்சி வடிகட்டிய தானியங்கள், கால்நடைத் தீவனத்துக்கான சிவப்பு சோளம், மரக்கொட்டைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் உள்பட பரவலான அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை இந்தியா வெகுவாகக் குறைக்க உள்ளது.
இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் ஒரு தரப்புக்கு சாதமாக உள்ளது. அமெரிக்காவிடம் இந்தியா ஒட்டுமொத்தமாக சரணடைந்துவிட்டது’ என்று விமா்சித்தாா்.

