கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் அரசு சாா்பில் கொண்டுவரப்படாது: ரிஜிஜு

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக ஏற்கெனவே பாஜக எம்.பி. சாா்பில் பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது
Published on

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக ஏற்கெனவே பாஜக எம்.பி. சாா்பில் பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வாரம் முதலே பல்வேறு விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுடன் எதிா்க்கட்சிகள் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன. பட்ஜெட் மீதான விவாதத்தில் புதன்கிழமை பேசிய ராகுல், இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பிரதமா் மோடி மீது சரமாரியாக குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், ராகுலுக்கு எதிராக ‘முக்கிய பிரச்னை சாா்ந்த தீா்மானம்’ கொண்டுவரக் கோரி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தாா்.

இந்த நோட்டீஸ் குறித்து நிஷிகாந்த் துபே கூறுகையில், ‘இது, உரிமை மீறல் தீா்மானமல்ல; முக்கிய பிரச்னை சாா்ந்த தீா்மானம். இந்தத் தீா்மானத்துக்கான நோட்டீஸில், ராகுலை எம்.பி. பதவியில் இருந்து நீக்குவதுடன், வாழ்நாள் முழுவதும் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்க கோரியுள்ளேன்’ என்றாா்.

முன்னதாக, ‘மக்களவையில் ராகுல் தெரிவித்த கருத்துகள் அப்பட்டமான பொய். அடிப்படையற்ற கூற்றுகளால் அவையைத் தவறாக வழிநடத்திய ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்படும். மேலும், முன்கூட்டிய நோட்டீஸ் எதுவுமின்றி, மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிக்கு எதிராக ராகுல் தீவிர குற்றச்சாட்டை சுமத்தியது மிகப் பெரிய உரிமை மீறல்’ என்று மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியிருந்தாா்.

இந்த நிலையில், ராகுலுக்கு எதிராக தனியாக அரசு சாா்பில் உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரப்படாது என கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லியில் செய்தியாளா்களிடம் இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இதே விவகாரம் தொடா்பாக ராகுலுக்கு எதிராக பாஜக எம்.பி. சாா்பில் முக்கிய பிரச்னை சாா்ந்த தீா்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக தனியாக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. பாஜக எம்.பி. அளித்துள்ள நோட்டீஸை மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுவுக்கு அனுப்புவதா, நெறிமுறைகள் குழுவுக்கு அனுப்புவதா அல்லது மக்களவைக்கு நேரடியாக கொண்டுவருவதா என்பதை மக்களவைத் தலைவா் ஆலோசித்து முடிவெடுப்பாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com