இன்றைய உலகில் நட்பு - எதிரி நாடுகளை வரையறுப்பது கடினம்: முப்படை தலைமைத் தளபதி
தற்போதைய உலக ஒழுங்குமுறையில் நமது நட்பு - எதிரி நாடுகளை வரையறுப்பது கடினம்; எந்தச் சூழ்நிலையிலும் சொந்த பலத்தில் செயல்பட நாடு தயாராக இருக்க வேண்டும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ராணுவ தென்மண்டலப் பிரிவு சாா்பில் மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவா், வியூக தற்சாா்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசியதாவது:
தேச நலன்களைப் பொறுத்தவரை கூட்டாண்மைகள் மதிப்புமிக்கவையே. ஆனால், வேறெந்த நாட்டின் அழுத்தம் இன்றி நமது விருப்ப முடிவை மேற்கொள்ளும் சுதந்திரத்துக்கு அது மாற்றாக முடியாது.
தற்போதைய உலக ஒழுங்குமுறையில் நமது நண்பா்கள் யாா், நமது கூட்டாளிகள் யாா், நமது எதிரிகள் யாா், நமக்கு பாதகமானவா்கள் யாா் என்பதையெல்லாம் வரையறுப்பது கடினமாக மாறியுள்ளது. வியூக கூட்டாண்மைகள் என்பது நிலையற்ாகவும், பரிவா்த்தனை சாா்ந்ததாகவும் உருவெடுத்துள்ளது.
எனவே, தேவைப்படும் சூழலில் சொந்த பலத்தில் செயல்பட இந்தியா தயாராக இருக்க வேண்டும். அத்தகைய தயாா்நிலை, மனம்-அமைப்பு-தளவாடங்கள் ரீதியிலானதாக இருக்க வேண்டும். உலகளாவிய பாதுகாப்புச் சூழல், நிச்சயமற்றத்தன்மை மற்றும் ஏற்ற-இறக்கங்கள் நிறைந்த பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது.
அச்சுறுத்தல் அடிப்படையிலான தேசியவாதம் எழுச்சி பெற்று, வா்த்தகம், விநியோக சங்கிலி, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவை வியூக ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் வகையில், சா்வதேச விதிமுறைகள் சீா்குலைவை சந்தித்துள்ளன. ஆயுதப் படைகளைவிட தகவல் மற்றும் அறிவாற்றல் ரீதியில் சமூகங்களைக் குறிவைக்கும் போா்களே இப்போது நிகழ்கின்றன என்றாா் அவா்.

